(தனுஜா)
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடைந்திருக்கின்றதா, இல்லையா என்பது இரண்டாம்பட்சமானது. ஆனால் எரிபொருள் விலையேற்றம் சரியானது என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியிருப்பதன் விளைவாக நாட்டுமக்கள் நிச்சயமாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்த விசாரணைகளில் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித அரசியல் ரீதியான அழுத்தத்தையும் பிரயோகிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரையான காலமும் அரசாங்கத்திற்குள் காணப்பட்ட பலதரப்பட்ட முரண்பாடுகளும் நீங்கி, அவர்கள் ஒற்றுமைப்படுவதற்கு இப்பிரேரணை வழிவகுத்திருப்பதாகவும் இது எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மிகமோசமான நகர்வுகளில் ஒன்று என்றும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே கேசரியிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.