(இராஜதுரை ஹஷான்)
மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மாகாண சபை தேர்தல் முறைமை  தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என மாகாண  சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

 மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் தங்களின் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும். என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தோம். தேர்தல் முறைமை மற்றும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் உள்ளிட்ட இரு பிரதான காரணிகள் தடையாக இருந்தன.

 பழைய தேர்தல் முறைமையின் பிரகாரம் இம்முறை மாத்திரம் மாகாண சபை தேர்தலை நடத்தலாம் எனவும் பிற்பட்ட காலத்தில் புதிய தேர்தல் முறைமை குறித்து அவதானம் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியது. இருப்பினும் கொவிட் -19 வைரஸ்  பரவல் காரணமாக தேர்தலை நடத்தும் தீர்மானம் தொடர்ந்து தாமதமாகியுள்ளது.

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதால் அரசாங்கத்திற்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்த்துள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பில் காணப்படும் சிக்கலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.