முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிலே உயிரிழந்துள்ள சிறுமி ஹிஷாலினியின் மரணம் மன வேதனையை அளிக்கின்றதாகவும், ஈடு செய்ய முடியாத இவ்விழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இச்செயலை மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் எனவும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கையொப்பமிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த காரணிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதானது,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது. ஈடு செய்ய முடியாத இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

இந்த துர் செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும். என்பதனையும், இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வியை தொடரமுடியாது. சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தபடுவதனை வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செல்லப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19,20 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளின் போதும் சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியதுடன், எந்தவித தலையீடுகளும் இல்லாத சுயாதீன விசாரணைகளின் மூலமாக உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதற்கு பூரண ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.