முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்றும் (21.07.2021) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 டயகம ஈஸ்ட் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர்கள் சுமார் ஒரு மணித்தியாலயம் மேற்கொண்டனர்.

உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

அத்தோடு, இதுபோன்ற சம்பவங்கள் இனி இடம்பெறாதிருக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.