(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக இரு விசேட பொலிஸ்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட பொலிஸ் குழுக்களால் உயிரிழந்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, டயகமவிலுள்ள சிறுமியின் தாயாரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்ட இரு விசேட குழுக்களுக்கும் உயிரிழந்த சிறுமி அவிசாவளை , புவக்பிட்டிய - கிரிவந்த பிரதேசத்திற்குச் பாடசாலையொன்றுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் போது 4 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குறித்த சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் , உபஅதிபர் ஆகியோரது வாக்குமூலங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதனையடுத்து குறித்த இரு விசேட பொலிஸ் குழுக்களுக்கும் டயகம பிரதேசத்திற்குச் சென்று இன்று புதன்கிழமை சிறுமியின் தாயாரிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளன. ஏனைய சிலரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணி புரிந்து ஆண் ஊழியர் ஒருவருடைய தொலைபேசி பொலிஸாரால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அத்தோடு குறித்த ஆண் ஊழியரிடமும் வாக்குமூலமும் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் குறித்த ஆண் ஊழியரின் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகள் ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக அவரின் தொலைபேசி நேற்று செவ்வாய்கிழமை பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கையையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அதே போன்று நீதிமன்றத்தினால் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் வங்கி கணக்குகளை சோதிப்பதற்கும் உத்தரிவிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தரவுகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதே போன்று குறித்த சிறுமி அழைத்து வரப்பட்ட நாள் முதல் இதுவரையில் ஏதேனுமொருவகையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவது இந்த விசாரணைகளின் பிரதான நோக்கமாகும். மேலும் மருத்துவ அறிக்கையில் காணப்படும் காரணிகள் தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.