நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தேஜாவு'. 

இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்மிருதி வெங்கட், 'ரோஜா' பட புகழ் நடிகை மதுபாலா, அச்சுத்குமார், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் விஜயபாண்டியுடன் இணைந்து ஒளிப்பதிவாளரான பி.ஜி. முத்தையா தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் பேசுகையில், 

'நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர் கதை இது. இதற்கு முன் அவர் பொலிஸாக நடித்திருந்தாலும் இந்த திரைக்கதையில் புதிய தோற்றப் பொலிவுடன் நடித்திருக்கிறார். 

நடிகை ஸ்மிருதி வெங்கட் இந்த திரைக்கதையில் நடித்திருந்தாலும், நாயகனுக்கு ஜோடியாக நடிக்காமல் சுவாரஸ்யமான வேடத்தில் நடித்திருக்கிறார். 

மூத்த நடிகை மதுபாலா இந்த திரைப்படத்தில் முதன் முதலாக பொலிஸாக நடித்திருக்கிறார். நடிகர் அச்சுத்குமார் நாவலாசிரியராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். 

இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது' என்றார்.

இதனிடையே இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும், இதற்கான படப்பிடிப்பு தமிழ் பதிப்பிற்கான படப்பிடிப்புடன் இணைந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருள்நிதியின் பிறந்தநாளான இன்று அவரது இரசிகர்களுக்கு பரிசாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.