விளையாட்டுகள் இறுதி நிமிடத்தில் இரத்து செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவித் தலைவர், அதனை நிராகரிக்காது பதிலளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 23) ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழவிற்கு முன்னதாக விளையாட்டுகளுடன் தொடர்புடைய 70 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

இந் நிலையில் திட்டமிடப்பட்ட போட்டிகள் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுமா என டோக்கியே ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தோஷிரோ முட்டோவிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அந்த கேள்வியை நிராகரிக்காத அவர், தொற்று எண்களைக் கண்காணிப்பதாகவும், தேவைப்பட்டால் போட்டிகள் குறித்து அமைப்பாளர்களுடன் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.

"கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் என்ன நடக்கும் என்று எங்களால் கணிக்க முடியாது. எனவே தொற்று அதிகரிப்பு இருந்தால் நாங்கள் தொடர்ந்து விவாதிப்போம்" என்று முட்டோ கூறினார்.

"கொரோனா வைரஸ் சூழ்நிலையின் அடிப்படையில், நாங்கள் மீண்டும் ஐந்து தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். இந்த கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை உயரலாம் அல்லது குறைவடையலாம். எனவே நிலைமையினை கருத்திற் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்போம்." என்றார்.

டோக்கியோவில் கொவிட் -19 தொற்றுகள் அன்றாடம் அதிகரித்து வருகின்றன. மேலும் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுக்கள் பார்வையாளர்கள் இல்லாமல் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் தோஷிரோ முட்டோவின் மேற்கண்ட கருத்து டோக்கியோ 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சந்தேகங்களை அதிகரித்துள்ளது.