இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகில் பிரம்மாண்டமான பட்ஜட் திரைப்படங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனமான லைகா நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற சரித்திர நாவலை தழுவி, இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த திரைப்படத்தை, இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். 

'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, தோட்டாதரணி கலை இயக்கத்தை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தை நேர்த்தியாக தொகுக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஓஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

டைட்டில் லுக் என்பதால் இதில் நடிக்கும் நடிகர்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமலும், தமிழில் தயாரானாலும் சர்வதேச அளவில் கவனம் பெற வேண்டும் என்பதால் டைட்டில் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கிறதோ..! என  இணையவாசிகள் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தாலும், அமரத்துவம் பெற்ற கல்கியின் எழுத்துகள், காட்சி படைப்புகளாய் வெளியாகவிருப்பதால், இணையத்தில் இதற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அப்படத்தில் நடித்துள்ள நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.