(நா.தனுஜா)

இலங்கை மாணவர்கள் நெருக்கடிகளுக்குத் திறம்பட முகங்கொடுக்கக்கூடிய வகையில் கொண்டிருக்கும் ஆற்றலும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் காண்பிக்கும் ஆர்வமும் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கின்றன. 

இத்தகைய மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வகுப்பறையொன்றை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தெளிவான வலைப்பின்னல் வசதிகளற்ற பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இணையவழிக்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு தடைகளையும் கடந்து அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது பற்றி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கில ஊடகமொன்றில் வெளியாகியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹனா சிங்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.