ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போதுதான் உரியவர் தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளது. இனிவரும் எந்தவொரு சவாலையும் துணிந்து எதிர்க்க தயாராவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 சம்மேளனம்   நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு வரவேற்புரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்  

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன,மத அடிப்படையிலான வேறுபாடுகள் எவையும் இருக்கவில்லை. அதுவே கட்சியின் உருவாக்க தந்தையான பண்டாரநாயக்கவின் கொள்கையாகவும் இருந்தது. 

அண்மை காலமாக அவரின் கொள்கைக்கு முரணாக செயற்படும் நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. எனவே கட்சிக்கு வெளியிலிருந்து விமர்சிப்பவர்கள் தற்போது கட்சிக்கு வந்து பார்க்க வேண்டும்.  அப்போதுதான் அவர்களால் இக்கட்சியின் வலிமையை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.

அதேநேரம் எமக்கு எதிராக வருகின்ற எவ்வாறான சவால்களையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே தற்போது நாங்கள் வலிமையாக உள்ளோம். கட்சி தற்போது உரியவர் கைகளில் கிடைத்துள்ளது.  அதனால் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க உருவாக்கிய கொள்கைகளுக்கும் தற்போது மீண்டும் உயிரூட்டபடுகின்றது என்றார்.