(இராஜதுரை ஹஷான்)
பதவியேற்றவுடன் எரிபொருள் விலையினை குறைப்பதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. நிவாரணம் வழங்க வேண்டிய  நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும். அவ்விடயம் குறித்து நாட்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என  நெடுஞ்சாலை  அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

ராஜகிரிய – நாவல ஊடாக நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாண பணிகளை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எரிபொருள் விலையினை குறைப்பதாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும் கட்சியின் உறுப்பினர்கள் அவ்வாறு குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றவுடன் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று குறிப்பிட்டார்கள். இதனை அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாகவே கருத வேண்டும் என்றார்.