(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச கடன்கள், தேசிய கடன்கள் அதற்கான வட்டிகளை செலுத்த பல பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களின் பக்கம் தீர்மானம் எடுக்க முடியாது. இந்த கடன்களுக்கான பணத்தையும் மக்களிடம் இருந்தே அறவிட வேண்டியுள்ளது. மாறாக பிரதமர் வீட்டில் இருந்து கொண்டுவர முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். இதன்போது மக்களுக்கு சலுகைகள் வழங்குவதென்றாலும் அதனையும் மக்களின் வரிகளிலேயே பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் வரிகளின் மூலமாக 1,216 பில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அதே ஆண்டில் அரச துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவாக 1,015 பில்லியன் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான நெருக்கடி  நிலையிலேயே நாம் உள்ளோம். இதற்கு மேலாக அரச கடன்களை செலுத்த முடியாது. கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நெருக்கடி நிலையிலேயே 2020 ஆம் ஆண்டில் இருந்து எதிர்கொண்டு வருகின்றோம் என்றார்.