அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக  எதிர்க்கட்சியினால் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் விதத்தில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை மீதான விவாதம்  பாராளுமன்றில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. பிற்பகல் 6 மணியளவில் கூடிய இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் கலந்துகொண்டனர்.

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியினால் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுகின்ற நிலையில் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் அவசரமாக இந்த கூட்டம் நேற்று கூடியது. நேற்றைய சந்திப்பின் போதும் ஜனதிபதியினாலும் பிரதமரினாலும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்புக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அரசாங்கமாக இதனை முகங்கொடுக்க சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை வாக்கெடுப்பின் போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சகலரும் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் .