(எம்.மனோசித்ரா)

நெருங்கிய உறவினரின் மரண சடங்குகள் மற்றும் வைத்திய சிகிச்சைக்காக உரிய ஆவணங்களைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாரத்தில் அதிக விடுமுறை நாட்கள் காணப்படுவதால், எதிர்வரும் புதன்கிழமை முதல் விசேட தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 245 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 50, 994 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 14 இடங்களில் 2,585 வாகனங்களும் அவற்றில் பயணித்த பயணித்த 3,401 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 139 வாகனங்களில் பயணித்த 293 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.