வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது, விலை அதிகரிப்பு மேற்கொண்டமைக்கு மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

விலை அதிகரிப்பை பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டும் என தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

குறித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டு எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொண்டிருக்கின்றார்.

அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையல்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர தீர்மானித்து, கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

இந் நிலையில் அமைச்சர் கமன்பிலாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றும் வாக்கெடுப்பு நாளையும் இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு அரசாங்கத்தினர் ஒருமித்த முடிவொன்றை எடுத்துள்ளனர். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடிலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, ஒரு வலுவான கூட்டணியாக, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசாங்கம் தோற்கடிக்கும் என்றார்.

இதேவேளை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தெரிவித்துள்ளது.