வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் மாரடைப்புக் காரணமாக வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகர் என்று உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் முதியவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் லண்டனில் பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான அட்டையை வைத்திருந்துள்ளார்.