(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக்கட்சியினுள் ஒன்றாக இருக்கும் ரெலோ பல விடயங்களை சகித்துக்கொண்டு தான் அதனுள் இருக்கின்றது என்று விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெலோவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக விக்னேஸ்வரன் தரப்பினை அவருடைய யாழ்.இல்லத்தில் ரெலோ சந்தித்திருந்தது.

இதன்போது, விக்னேஸ்வரன் தரப்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார்கள்.

குறிப்பாக, ஒன்பது கட்சிகளின் கூட்டு முன்னெடுக்கப்பட்டபோது அந்தக் கூட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் என்பதால் மீண்டும் அவர்கள் கூட்டமைப்பிற்குள்ளேயே வர வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்ட விடயத்தினை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழ்க் கட்சிகள் பொதுவான அரசியலமைப்பு தீர்வுத்திட்ட முன்மொழிவைச் செய்வதற்கு மாவை.சோ.சேனாதிராஜா இணக்கம் வெளியிட்டு பின்னர் அமைதி காத்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இதுகால வரையிலும் கூட்டமைப்பில் காணப்படுகின்ற குறைப்பாடுகளுக்கு தமிழரசுக்கட்சி காரணமாகியுள்ளமை தொடர்பான விடயங்கள் இன்னமும் சீர் செய்யப்படாத நிலையில் ரெலோவின் முயற்சி வெற்றி அளிக்குமா என்று கேள்வி எழுப்பபட்டது.

அதுமட்டுமன்றி, ரெலோ இவ்விதமான அனைத்து விடயங்களை மறந்தாலும் இறுதியாக பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனான கூட்டமைப்பின் சந்திப்பின் பின்னர் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் ரெலோவின் முயற்சி குறித்து கருத்துக்கள் எழுந்தபோது மாவை.சோ.சேனாதிராஜா அமைதி காத்தமையும் சுட்டிக்கட்டப்பட்டது.

இத்தருணத்தில் ரெலோவின் தலைவரும் பேச்சாளரும் “கூட்டமைப்பினுள் நீங்கள் குறிப்பிடுகின்ற பல விடயங்கள் காணப்பட்டாலும் நாம் சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக இருக்கின்றோம்.

தற்போது நாம் இதய சுத்தியுடனேயே ஒருமித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி வராது விட்டாலும் அக்கட்சியின் முழுமையான ஆதரவு இருப்பதாக தலைவர் கூறியுள்ளார்” என்று பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.