கியூபாவில் கிளர்ச்சி 

Published By: Digital Desk 2

17 Jul, 2021 | 11:02 AM
image

குமார் சுகுணா

உலகில் பல வல்லரசு நாடுகள் இருப்பினும் சில நாடுகள் மட்டும் எப்போதும் நமது நினைவில் இருக்கும். அதற்கு ஏதாவது விஷேட காரணங்கள் இருக்கும். 

பொதுவாகவே உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் புரட்சிகள் மூலம் தங்களது உரிமையை வென்றெடுத்த நிகழ்வுகள் பல உள்ளன. அவ்வாறான நாடுகளும் அந்த நாட்டு மக்களும்  ஏனைய நாடுகளுக்கு உதாரணங்களாக மாறிவிடுகின்றனர். அப்படி ஒரு நாடுதான் கியூபா.

கியூபா என்றாலே நம் நினைவுக்கு வருவது பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா... சேகுவேரா கியூபாவை சேர்ந்தவர் இல்லாத போதிலும் அந்த மக்களுக்காக போராடிய மாவீரன். இவர்களினாலேயே கியூபா சுதந்திர கியூபாவாக மாறியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு கியூபாவை ஆட்சி செய்துவந்த பொடிஸ்டாவுக்கு எதிராக கொரில்லா போர் புரிந்து வெற்றிபெற்று, 1959-ஆம் ஆண்டு கியூபாவின் ஜனாதிபதியானார் பிடல் காஸ்ட்ரோ. கியூபாவைப் பொறுத்தவரை 1959-ஆம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சிதான் ஆண்டுவருகிறது. அது காஸ்ட்ரோவின் கட்சி.

அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார் பிடேல். கடந்த ஏப்ரல் மாதம் 89 வயதான ராவுல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி, காஸ்ட்ரோ சகாப்தத்துக்கு முற்றுப் புள்ளிவைத்தார். ராவுல் காஸ்ட்ரோவுக்கு பிறகு மிகல் தியாஸ் கானெல் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்.

இந்நிலையில் மக்களுக்காக உருவாக்கபட்ட கியூபாவில் தற்போது மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிவருகின்றனர். கியூபாவில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். கடந்த ஞாயிறன்று கியூபாவின் சேன்டியாகோ நகரில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்பு நாடும் முழுவதும் பரவியது.

கியூபாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்றை அரசு கையாண்டவிதம்தான் இந்தப் போராட்டத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிப்பதும், மறுபுறம் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் மக்களைக் கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியுள்ளன.

இவை தவிர கடுமையான மின்வெட்டும் மக்களை அதிருப்தியின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டக் களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தில், மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம்’ என்றும், `விடுதலைதான் வேண்டும்’ என்றும் ஆங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் காரணம். இரண்டாம் அலையில் பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் இறந்துள்ளனர்.

தன் நாட்டு மருத்துவர்களை பிற நாடுகளுக்கு மருத்துவ உதவிகளுக்கு அனுப்பிவைப்பது கியூபாவின் வழக்கம். கடந்த காலங்களில் கொரோனா காலத்தில் கூட இது போல பல நாடுகளுக்கு  கியூபாவின் மருத்துவ குழுக்கள் சென்று மருத்துவ உதவிகளை செய்திருக்கின்றன. இந்நிலையில் அங்கு இப்போது மக்கள் மருத்துவ வசதிகள் இல்லை என்று போராடிக்கொண்டிருப்பது வேதனைத்தான்.

மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைக் கூறி போராடும் மக்களிடம்'கியூபா தனது சொந்தத் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருக்கிறது' என்று கூறி ஆறுதல்படுத்த முயன்றுவருகிறார் ஜனாதிபதி மிகல்.

ஆம். கியூபா உலக நாடுகளிலிடமிருந்து தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யாமல், ஐந்து தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் ’சொபெரானா’ (இறையாண்மை) தடுப்பு மருந்து. இது அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு 91 சதவிகித பலன் அளிப்பதாக தெரிவித்திருந்தது கியூபா.

கொரோனா தொற்று சுகாதாரக் கட்டமைப்பை சிதைப்பது ஒருபுறம் இருக்க, கொரோனா கட்டுப்பாடுகளால் கியூபாவின் சுற்றுலாத்துறையும் பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது. கியூபாவின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையைப் பெரிதும் சார்ந்துள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பதற்றத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று தெரிவித்திருக்கிறார். போராட்டக்காரர்கள் அமெரிக்காவால் தூண்டிவிடப்படுகிறார்கள் என்றும், அதற்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குகிறது என்றும் கியூப அரசியல் வாதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

வரலாரை திரும்பி பார்த்தால் 1959-ஆம் ஆண்டு பிடல் பெற்ற வெற்றியை, கம்யூனிசத்தின் வெற்றியாக கருதிய அமெரிக்கா அதை ஒடுக்க நினைத்து, கியூபாவின் பொருளாதாரத்தை நசுக்க பல்வேறு தடைகளை விதித்தது உண்மையதான்.

கியூபா, காஸ்ட்ரோவின் காலத்திலிருந்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 1962-ஆம் ஆண்டிலிருந்து அந்த நாட்டின் மீது பல தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில்தான் அந்தத் தடைகள் தளர்த்தப்பட்டன. ஆனால் ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் அந்தத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

தற்போது பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு தடைகள் நீக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தனது ஆட்சியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாக அது இல்லை என்று பைடன் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

கியூபாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் தடையும் காரணம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.

கியூபாவின் மக்களின் பக்கம் நிற்பதாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதை விடுத்து மக்களின் குறைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவில் சர்வாதிகார ஆட்சியால் பல வருடங்களாக அடக்குமுறை மற்றும் பொருளாதாரத் துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்” என்றார்.

கியூபாவில் இடம்பெறும் மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா காரணமா அல்லது அந்த நாட்டு ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை காரணமா என்று நாம் விவாதிக்கவில்லை.

எந்த ஒரு ஆட்சியோ அல்லது ஆட்சியாளனோ மக்களால் விரும்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கப்பட்டாலும் அந்த ஆட்சி பிரிதொரு காலத்தில் அதே மக்களால் வெறுப்புக்கு உள்ளாகுகின்ற சந்தர்ப்பங்கள் பல உள்ளன. இதற்கு அந்த ஆட்சியாளர்களின் போக்கே முக்கிய காரணமாக அமைகிறது.  மக்கள் ஆட்சியாளர்ளின் மீது வைக்கும் நம்பிக்கை இல்லாது போகும் போது,  இது போன்ற புரட்சிகள் நடக்கத்தான் செய்யும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41