நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள், நான்கு தேவாலயங்கள் மற்றும் ஒரு கோயில் ஆகியவற்றை வடிவமைத்துள்ள 85 வயதான கோவிந்தன் கோபாலகிருஷ்ணன் ஒரு அசாதாரண கட்டடக் கலைஞர்.

'பள்ளிவாசல் மனிதர்' என்று பரவலாக அறியப்படும் அவர் ஆறு தசாப்தங்களாக நீடிக்கும் தனது வாழ்க்கையில், 'மனிதகுலத்தின் ஒற்றுமை' மீது தான் அன்பு செலுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் தெற்கு நகரமான கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தனது சாதாரண வீட்டில் அல்குர்ஆன், பைபிள் மற்றும் இந்து வேதங்களின் பிரதிகளை வைத்திருக்கும் வயது முதிர்ந்த அவர் மத நல்லிணக்கத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கின்றேன், அதேபோல சபரிமலை யாத்திரயின்போது 41 நாட்கள் விரதமிருக்கின்றேன். 60 வயதான எனது மனைவி ஜெயா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், அதனால் உயிர்த்த ஞாயிறு விரதத்திலும் அவருடன் பங்கேற்கின்றேன் என சிரித்தவாறே குறிப்பிடுகின்றார்.

'எனது இரு மகன்களில் ஒருவர் முஸ்லிம் பெண்ணையே திருமணம் செய்துள்ளார். எனது வீட்டுக்கு வரும் அனைத்து மதத்தவர்களையும் வரவேற்கின்றேன். சமமான மரியாதையினையும் வழங்குகின்றேன்.' என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

சுயமாகவே கட்டடத்துறையினைக் கற்றுக்கொண்ட கோபாலகிருஷ்ணன் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டதன் பின்னர் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக தனக்கு கல்லூரிக் கல்வியினைத் தொடர்வதற்கு முடியாமல் போய்விட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

அதன் பின்னர் கட்டட ஒப்பந்தக்காரரான தனது தந்தையிடம் உதவியாளராக இணைந்து கொண்டார்.

இளம் வயது கோபாலகிருஷ்ணன் தனது தந்தையால் கட்டப்படுகின்ற கட்டடங்களின் வரைபடங்களை தனது குறிப்பேட்டில் பதிவு செய்யத் தொடங்கினார். பின்னர் அவற்றின்  விவரங்களை அசல் கட்டமைப்புகளுடன் ஒப்பிட்டு, நுட்பங்கள், நிழற்படங்கள் மற்றும் வண்ணத் திட்டங்கள் தொடர்பில் தனது தந்தையிடம் கேட்டறியும் பழக்கத்தைக் கொண்டவராக இருந்தார்.

இதனிடையே, அவர் 1960 களில் புகழ்பெற்று விளங்கிய ஆங்கிலோ-இந்திய பட வரைஞரான லா சல்டானாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார், அவர் வரைதலின் அடிப்படைகளை கோபாலகிருஷ்ணனுக்கு கற்றுக் கொடுத்தார்.

'நான் கேரள பொதுப்பணித் துறையில் ஊதியம் பெறாத ஒரு பயிற்சியாளராகவும் பணியாற்றினேன், இது எனது கைவினைப் பணிகளில் எனக்கு உதவியது, பின்னர் கேரளாவின் சின்னமான பாளையம் பள்ளிவாசல்  புனரமைப்புப் பணிகளில் எனது தந்தைக்கு உதவத் தொடங்கினேன்' என அவர் அல் ஜஸீராவிடம் தெரிவித்தார்.

'இந்த கட்டமைப்பை மீண்டும் புனரமைக்க ஐந்து ஆண்டுகள் சென்றன, அது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகும். கட்டடக்கலைதான் எனது கடமை என்பதை இது எனக்கு உணர்த்தியது' என கோபாலகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். அவர் வர்த்தக மற்றும் குடியிருப்பு இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சனசமூக மத்திய நிலையங்கள் என ஏராளமான கட்டடப் பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

1964 ஆம் ஆண்டில் இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களால் பாளையம் பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டபோது தந்தை-மகன் இருவருக்கும் மிகவும் பெருமையாக இருந்தது.

ஒரு இந்து - ஒரு கிறிஸ்தவ நண்பரின் (லா. சல்டானா) துணையுடன் ஒரு பள்ளிவாசலைக் கட்டியெழுப்பவும், ஒரு கோவிலுக்கும் தேவாலயத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு பள்ளிவாசலைக் கட்டவும் இறைவன் அருளே காரணமாக இருந்தது என நான் நம்புகின்றேன். இது சமய நல்லிணக்கத்தின் பிரகாசமான உதாரணமாகும் எனவும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கட்டடக்கலையில் முறையான பட்டம் இல்லை என்றாலும், கட்டடக்கலை நுட்பங்களைப் பற்றிய கட்டடப் பணியில் ஈடுபட்ட அவரது உள்ளுணர்வு, அவரது அர்ப்பணிப்புடனான பணி நெறிமுறை மற்றும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் வழங்குகின்ற திருப்திகரமான சேவை ஆகியவை அவரது வெற்றிக்குக் காரணமாகின.

திருவனந்தபுரத்தில் மூன்று மாடி குடியிருப்பு ஒன்றை நிர்மாணித்ததே அவர் தனியாக மேற்கொண்ட முதலாவது வேலையாகும். இது உரிமையாளரை மிகவும் கவர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், 1976 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பீமாப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசல் கட்டட நிர்மாணத்திற்கு தலைமை தாங்கியபோது அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஒரு பெரிய கட்டமைப்பை சிறுகச் சிறுக சேகரிக்கப்படும் நன்கொடைகள் மூலம் கட்டி முடிக்க 18 ஆண்டுகள் தேவைப்பட்டன.

வரவு செலவு தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், கோபாலகிருஷ்ணன் தனது படைப்புகளில் புத்தம்புது வடிவங்களையும் புதுமையையும் புகுத்தினார். பழங்கால வடிவங்களில் மாற்றங்களைச் செய்தார்.

உதாரணமாக, கருநாகப்பள்ளியில் உள்ள ஷேக் மஸ்ஜித், முகலாய காதல் நினைவுச்சின்னமான தாஜ்மஹாலைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கொல்லத்திற்கு அருகிலுள்ள ஜியாரதுமூது பள்ளிவாயல் இந்தோ-சரசெனிக் பாணிகளின் கலவையாகும். அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள சலாய் பள்ளிவாசல் சமகால கட்டடக்கலை நுட்பங்களைத் தழுவியதாகக் காணப்படுகின்றது.

இக் கட்டடக் கலைஞரான கோபாலகிருஷ்ணன் தனது வேலையினை பரந்துபட்டதாக மேற்கொண்டுள்ளார். அரபு மொழியில் எழுதப்பட்ட புனித அல்குர்ஆனின் வசனங்களினால் பள்ளிவாயல் முகப்புகளை அலங்கரித்துள்ளதோடு கேரளாவின் உள்ளூர் மொழியான மலையாளத்தில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும் அவர் கட்டிய கட்டமைப்புகளில் பொறித்துள்ளார்.

கோபாலகிருஷ்ணனின் புதுமையான செயற்பாடு தொடர்பில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், சில விமர்சகர்கள் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

பீமாபள்ளி பள்ளிவாசலில் தாமரை வடிவத்தைப் பயன்படுத்தியபோது சர்ச்சை உருவானது. 'தாமரை ஒரு அழகான மலர், இந்தியாவின் தேசிய மலர். எனவே ஒரு கலைஞனாக, அதைப் பயன்படுத்துவதில் எந்த தவறையும் நான் காணவில்லை. ஆனால் சிலர் அதை வேறுவிதமாகப் பார்த்தார்கள்,' என அவர் அல் ஜஸீராவிடம் தெரிவித்தார்.

தாமரை மலர் பல்வேறு இந்து கடவுள்களின் உருவங்களுடன் காணப்படுவதோடு ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் சின்னமாகவும் உள்ளது.

எனினும், பழைய மரபுகளை மீண்டும் கண்டுபிடிக்கும் அவரது முனைப்புகளுக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் 'இறைவனின் இல்லம் தப்பெண்ணங்களிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என்பதால்  தனது மனச்சாட்சிப்படி பள்ளிவாயல்களை கட்டும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக அவர் கூறுகின்றார்.

கோபாலகிருஷ்ணனின் பணிகளில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் கேரளாவுக்கு வெளியேயுள்ள எந்த இஸ்லாமிய கட்டடக்கலை நிர்மாணங்களை பார்க்கவுமில்லை அந்த இடங்களுக்கு விஜயம் செய்திருக்கவுமில்லை.

முயற்சித்தலும் பிழையாதலும் என்ற கற்றல் முறைமூலமும் மிகக் கூர்மையான அவதானத்தின் மூலமாகவும் தான் வடிவமைக்கும் கட்டமைப்புக்களுக்காக புதிய கலையம்சங்களைக் கண்டுபிடிக்கின்றார்.

தனது கட்டட வடிவமைப்புக்களுக்கு இந்தோ-சரசெனிக் வடிவமைப்பு மாதிரியினை பின்பற்றுவதாக குறிப்பிடும் அவர், பிரபல பிரித்தானிய அறிஞரும் வராற்றியலாளருமான பேர்ஸி புரெளணினால் எழுதப்பட்ட 'இந்திய கட்டடக்கலை-இஸ்லாமிய காலப்பகுதி மற்றும் கட்டடக்கலை-இந்து காலப்பகுதி' ஆகிய புதிய பாதையினை உருவாக்கிய புத்தகங்களை தனது வேதநூலாகக் கருதுகின்றார்.

கோபாலகிருஷ்ணனின் மாறுபடும் வடிங்கள், புதிய தலைமுறை வழிபாட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆதரவாகக் காணப்படுகின்றன. பள்ளிவாசல்களின் பாரம்பரிய வண்ணங்களை மாற்றியமைத்து, இளஞ்சிவப்பு மற்றும் வெளிர்பச்சை நிறங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

உலகளாவிய தொற்று தற்போது அவரைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ள இந்த சவால்மிக்க சூழ்நிலையில் அவர் தனது பணியினை எவ்வாறு மேற்கொள்கின்றார்?

'காலையில் 6.00 மணிக்கு எழுந்து பத்திரிகையினை வாசித்து முடித்துவிட்டு 8.30 மணியளவில் காலைச் சாப்பாட்டை முடித்துவிட்டு எனது புத்தகத்தை வடிவமைக்கும் பணிக்காக எனது மேசைக்குச் சென்று அமர்வேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயர் 'நான் கண்ட குர்ஆன்' (Njaan Kanda Quran) குர்ஆனிலிருந்து நான் பார்த்தவையும் புரிந்துகொண்டவையும் என்பது அதன் கருத்தாகும்'

1,200 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தைப் பூர்த்திசெய்ய கோபாலகிருஷ்ணனுக்கு ஆறு வருடங்கள் சென்றன. 'வாசகர்கள் மிக எளிதாகவும் அர்த்தபுஷ்டியுடனும் குர்ஆனைப் புரிந்துகொள்ள உதவும்' என அவர் குறிப்பிடுகின்றார்.

'அல்குர்ஆனை வாசிக்கும்போது பைபிள் மற்றும் கீதையிலுள்ள போதனைகளையொத்த உபதேசங்கள் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களையும் எடுத்து ஏனைய இரு சமய வசனங்களுடன் ஒப்பீடு செய்யும் அதேவேளை எனது விபரமான கருத்துக்களையும் பதிவு செய்கின்றேன். இந்த விடயம்தான் எனது புத்தகத்தின் மூலக் கருத்தாகக் காணப்படுகின்றது. என்றாவது ஒரு நாள் இந்த புத்தகம் பிரசுரிக்கப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.'  

மதங்களுக்கிடையேயான புரிதலையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிக்கும் ஒரு சமூக, தொண்டு நிறுவனமான 'மானவமைத்ரி' என்ற அமைப்பினை கோபாலகிருஷ்ணன் ஏற்படுத்தியுள்ளார். இனம், மதம், சாதி குல அடிப்படையில் வேறுபட்டுக் கிடக்கும் உலகம் தொடர்பான பார்வையின் விளைவே இவ்வமைப்பின் தோற்றமாகும்.

வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள கோபாலகிருஷ்ணன் தன்னிடம் இன்னும் ஒரு நிறைவேறாத பணி உள்ளது என்று கூறுகிறார்: கீதை, குர்ஆன் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களை மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய சமய சிந்தனைக்கான பாடசாலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்பதே அந்தப் பணியாகும் எனவும் தெரிவிக்கின்றார்.

'ஒரு நாள், என்னுடைய இந்த கனவையும் நனவாக்குவேன் என நம்புகிறேன் எனத் தெரிவிக்கும் இந்தக் கட்டடக் கலைஞர், இறைவனை அடைவதற்கான ஒரு வழியாக நாம் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், கடவுள் இறுதியில் ஒருவரே என்பதை நாம் அனைவரும் உணர முடிந்தால் அது மிகச் சிறந்ததாக இருக்கும்' எனவும் குறிப்பிடுகின்றார்.

'நாம் இதனை உணர்ந்து அனைத்து மதங்களையும் மதிக்கும் தருணத்தில், அனைத்து மோதல்களும் முடிவுக்கு வரும். உலகம் அதற்கு ஒரு சிறந்த இடமாக காணப்படுகின்றது' என்பது அவரது கருத்தாகும். 

எம்.ஐ.அப்துல் நஸார்

நன்றி - விடிவெள்ளி