(செய்திப்பிரிவு)

சுபீட்சத்தின் இலக்கு கொள்கைத்திட்டத்திற்கு அமைய பெருநகரப் பல்கலைக்கழக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது பல்கலைக்கழகம் கேகாலை மாவட்டத்தில்  பின்னவெல எனும் பகுதியை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில்  அதற்கான பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும  வகையில்   அதன் உத்தியோகப்பூர்வ  இணையத்தளம் www.cu.ac.lk  2021- உலக இளைஞர்  திறன் தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய தொழினுட்பத்தின் மூலம்   தொழில் சந்தையை  இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில்  அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை தொடர்ந்து பல்கலைகழகங்களுக்க தகுதி பெறுகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கிறார்கள்.பொருளாதார ரீதியில்  வசதியுள்ள மாணவர்கள்  தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள். உயர்தரத்தில் சித்திப் பெற்று  பொருளாதார ரீதியில் வசதியில்லாத மாணவர்களுக்கு தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில்  பட்டபபடிப்பை வழங்குவது  இந்த பெருநகர பல்கலைக்கழகத்தின்  பிரதான இலக்காகும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான , உள்நாட்டு மற்றும் உலகளாவிய  தொழில் சந்தைக்கு பொருந்தும்  வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என திறன் விருத்தி தொழில் கல்வி மற்றும்  புத்தாக்கத்துறை இராஜாங்க அமைச்சர்  வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு 4 சதவீதமாக காணப்பட்ட இளைஞர்களின் தொழிலின்மை வீதம் 2019 ஆம் ஆண்டு 16 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. 

தற்போதைய உலகளாவிய நிலைமைக்கு அமைய தொழிலின்மை வீதம் 30 சதவீதமாக அதிகரிக்க கூடும். ஆகவே பட்டப்படிப்பின் மூலம் திறமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும். என  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பட்டதாரிகள் அரச தொழிலை எதிர்பார்க்கிறார்கள். எனினும் அரசாங்கத்தின் பொறுப்பானது  தொழில்களை வழங்குவதல்ல மாறாக  தொழில்களை உருவாக்கும்  ஒரு விரிவான  பொருளாதாரச் சூழலை  உருவாக்குவதாகும்.

பெருநகர பல்கலைக்கழக திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள கூடிய அல்லது சுய தொழிலில் ஈடுப்பட கூடிய  அறிவுள்ள நபரை பட்டப்படிப்பின்  முடிவில்  உருவாக்கவது பிரதான எதிர்பார்ப்பாகும்.

நூற்றுக்கு நூறு சதவீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது. இருப்பினும் தனியார் பல்கலைக்கழகங்களை ஒரு வியாபாரமாக  நடத்துவது எதிர்க்கத்தக்கது. என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.