ம.ரூபன்

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்கள்,மனித உரிமை அமைப்பினர் இலக்கு வைக்கப்படுவதாகவும் 27 நாடுகளடங்கிய  ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் கண்டித்துள்ளதுடன் இதனை நீக்காவிடில் ஐ.பி.எஸ்+ ஏற்றுமதி சலுகைகளை வாபாஸ் பெறப்போவதாகவும் அறிவித்திருந்ததை தொடர்ந்து இச்சட்டத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கடந்த மாதம் 25 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அறிவித்து, இச்சட்டத்தின்  கீழ் சிறையிலிருந்த 16 முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசமைப்பின் 34 வது பிரிவின்படி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களில் விடுதலையாகவுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கே இப்பொதுமன்னிப்பு,நீண்டகாலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகவில்லை என அவர்களின் உறவினர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சித்தனர். பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில்  மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு  ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அளித்ததை பலரும் கண்டித்துள்ளனர்.

2009 போர் முடிந்த பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பல தடவைகள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வந்தனர்.தமிழ் அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் அளிக்கும் உறுதிமொழியால் போராட்டத்தை கைவிடுவார்கள்.வடக்கு,கிழக்கு உட்பட பல இடங்களில் இவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள்,ஊர்வலங்களும் நடைபெற்றன.ஜனாதிபதிக்கு சமய,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று தெற்கு அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

1993 செப்டம்பர் 27 மட்டக்களப்பில்  கைதான செல்லப்பாபிள்ளை மகேந்திரன் (19 வயது) என்ற  இளைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணயில் 1995 ஆகஸ்ட் 04 ஆயுட்கால சிறையும்,மேலதிகமாக 50 வருட சிறையும் விதிக்கப்பட்டபோது 21 வயது.நீரிழிவு ,காச நோயாளி. ஒரு புண் ஏற்பட்டதால் சிறையில் வாடும் போது கடந்த ஜனவரியில் மரணமானார்.1990 மட்டக்களப்பில் 600 பொலிசாரை கொல்ல உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு.இப்படி பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் நோய்கள் காரணமாக மரணமானார்கள்.

1983 ஆடிக்கலவரத்தின் போது வெலிக்கடைச்சிறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்பட 53 தமிழக்கைதிகள் சிங்களக்கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.இவர்களின் சிறைக்கூடங்களை உடைத்து கம்பி,பொல்லு,கூரிய ஆயுதங்களால் சிறைக்காவலர்கள் முன்பாக தாக்கினர்.ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் இரு தினங்கள் திட்டமிட்டு இத்தாக்குதல்கள் இடம்பெற்றன.இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியில் 2005 ஒக்டோபர் 22 பண்டாரவளை பிந்தினுவெவ தடுப்பு முகாமில் 29 தமிழ் இளைஞர்களை வெளியாட்கள் புகுந்துவெட்டியும்,குத்தியும் படுகொலை செய்தனர்.பொலிசார் உட்பட்45 பேர் மீது வழக்கு. இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு!ஏனையோர் விடுதலை.தீர்ப்புக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு செய்து,விடுதலையானார்கள்.முதல் நாள் பாதுகாப்பிலிருந்த படையினர் விலக்கப்பட்டனர்.இதில் காயமடைந்தவர்களை பண்டாரவளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது 'புலிகள்' என சிகிச்சையளிக்க மறுத்தனர்.

இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு எம்.பி.யோசப் பரராசசிங்கமும்,அரசுக்கு தொடர்புள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் இரா.சம்பந்தனும் கூறியிருந்தனர்.சரணடைந்த  போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க இம்முகாம் ஜனாதிபதி செயலகம்,பாதுகாப்பு அமைச்சினால் அமைக்கப்பட்டது.

2012 ஜூன் வவுனியா சிறையில்  நிர்மலரூபன்,மரியதாஸ் டில்ருக்சன் ஆகிய இரு தமிழக்கைதிகள் சிங்கள கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்கள்.

1997 டிசம்பர் களுத்துறை சிறையிலும் 3 தமிழ் கைதிகள் சிங்கள கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.2012 ஆகஸ்ட் காலி சிறையில் சுந்தரம்சதீஸ்குமார் (34 வயது) தமிழ் அரசியல் சிங்களக்கைதிகளால் தாக்கப்பட்டு,படுகாயமடைந்து காலி-கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொடிகாமத்தைச் சேர்ந்த இவர் 2008 இல் கைதாகி,நியூ மகசின் சிறைச்சாலையில் இருந்து சில தினங்களுக்கு முன்பே  மாற்றப்பட்டார்.

களுத்துறை,பூசா,அனுராதபுரம்,நீர்கொழும்பு,மகர,வெலிக்கடை போன்ற தெற்கு சிறைகளுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் இருந்து பெற்றோர்,உறவுகள்  சென்று அங்குள்ள தமது பிள்ளைகளை கணவன்மாரை பார்வையிடுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.வடக்கில் இவர்களை சிறைவைத்தால் இந்தியாவுக்கு தப்பியோடிவிடுவார்கள் அங்கே பாதுகாப்பில்லை என முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருந்தார்.

2005 ஆகஸ்ட் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையை தொடர்ந்து ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தீவிர தேடுதல்,கைதுகள்,தடுத்துவைத்தல் போன்றவற்றுக்கு அவசரகால விதிகளில் விசேட அனுமதியை படையினர்,பொலிசாருக்குவழங்கினார்.இதனால் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதானார்கள்.

பாராளுமன்றத்தில் கடந்த 6 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்"இச்சட்டத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும்.இதனை தவறாக பயன்படுத்தி கைதாகும் சந்தேக நபர்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனர்.அண்மைக்காலங்களில் பல முஸ்லிம்கள்  எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.குற்றப்புலானய்வு பிரிவு,சட்ட மா அதிபர் திணைக்களம் என்பனவற்றில் அரசியல் தலையீடுகளால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என்றார்.யாழ்.மாவட்ட உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,இந்த தடைச்சட்டத்தை திருத்துவது அர்த்தமற்றது,இதனை முற்றாக நீக்கவேண்டும்.என்றார்.இரா.சாணக்கியன் பொலிசாரின் சித்திரவதைகள் குறித்து பேசினார்.

பல தமிழப்பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி,பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான சம்பவங்களும் உள்ளன.மன்னாரில் விஜிகலா (22),சிவமணி(24) ஆகிய இரு பெண்கள் 2001  ஆம் ஆண்டு  மாரச் மாதம் 10 ஆம் திகதி  விடுதியில் இருந்தபோது கைதாகி,சிங்களத்தில் எழுதிய வாக்குமூலத்தில் ஒப்பமிடுமாறு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் ஐ.நா.மனித உரிமை அமைப்பு ஜனாதிபதி சந்திரிகாவின் கவனத்துக்கு கொண்டுவந்தது.  இதனை வெளியிட்ட முஸ்லிம் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

1977 ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கு(Prevention of Terrorism Act ) என்ற சட்டத்தை 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி கொண்டுவந்தபோது கொழும்பு தெற்கு உறுப்பினர் ஏ.பி.டீ.சொஸ்சா, " அப்பாவிகளை விசாரணையின்றி தடுத்து வைப்பது ஆபத்து " என எச்சரித்தார்.மதவாச்சி எம்.பி.மைத்திரிபால சேனநாயக்க, " புலிகளையும்,இயக்கங்களையும் தடைசெய்து,அவசரகாலச் சட்டம்,பொதுசன பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே உள்ள நிலையில் இது சர்வாதிகாரம்" என்றார்.

தனது மருமகனான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை வடக்கே தமிழ்ப்போராளிகளை அழிக்க கட்டளை தளபதியாக நியமித்து,1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  31 ஆம் திகதி  முதல் டிசம்பர் மாதம்  31 ஆம் திகதி வரையான ஆறு மாதங்களில் படை நடவடிக்கையை முன்னெடுத்தார்.இதனால் பல தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றன.

2015 ஆம் ஆண்டில்  நல்லாட்சியும் இச்சட்டத்தை அகற்றாது  திருத்தங்களை செய்தது.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது.40 வருடங்களாக இச்சட்டம் அமுலில் உள்ளது.ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும், ஐரிஸ் போராளிகளை அழிக்கவும் ஏற்படுத்திய சட்டத்தையே கொண்டுவந்தேன். தமிழ் போரளிகள் ஆயுதங்களை கைவிட்டு,ஜனநாயக வழிக்கு திரும்பினால் இச்சட்டத்தை உடனும் நீக்குவேன் என இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 29 ஆம் திகதி அன்று  கைச்சாத்தான பின்பு  ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருந்தார்.ஆபிரக்காவில் இதே சட்டத்தால் நூற்றுக்கணக்கானவர்கள் கைதாகி காணாமல் போனார்கள்,பலர் சித்திரவதைக்குள்ளானார்கள்.

1980 களில் இச்சட்டத்தில்  கைதாகி பூசா போன்ற சிறைகளில் இருந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து ஜனாதிபதி ஜே.ஆரின் பொது மன்னிப்பில் விடுதலையானார்கள்.1989 ஆம் ஆண்டு மே மாதம் பிரேமதாச-புலிகள் சமாதானப்பேச்சு,1994 ஆம் ஆண்டு சந்திரிகா- புலிகள் சமாதானப்பேச்சு  இடம்பெற்றபோதும் இச்சட்டத்தை நீக்குமாறு புலிகளும் கோரவில்லை. இடைக்கால நிர்வாகம்,பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்புக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் ஜே.வி.பியின் ஆயுதப்போராட்டம் தெற்கில் தீவிரமானபோதும்,ஜே.வி.பியுடன் தொடர்பான சிங்கள இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி விசாரணை செய்யப்படவில்லை.ஆனால் வெள்ளைவானில் கடத்தப்பட்டனர்.வீதிகளில் டயர் போட்டு எரியுண்ட சடலங்கள் ஆறுகளில் மிதந்த சடலங்கள்.

1981 ஆம் ஆண்டு டாக்டர் போல் என்பவரின் 14 வயது மகள் மீது பாலியல் குற்றம் புரிந்து  15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கொனவல சுனிலை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பொது மன்னிப்பளித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ஆதரவாளரான இவர் கட்டானை,மிலாகிரிய இடைத்தேர்தல்களில் அதிகாரிகள் முன்பு கள்ள வாக்கு போட்ட பாதாள குழுத்தலைவர்.கல்வியமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர்.1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை தமிழக்கைதிகள் படுகொலையிலும் சம்பந்தப்பட்டவர்.சமாதான நீதிவான் பதவியும் வழங்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான மாணவர்களை இவரும் சில பாதாள குழுவினரும் தாக்கியதில் கிறிஸ்டோபர் ஜயதிலக்க என்ற மாணவன் கொல்லப்பட்டார்.மார்ச் மாதம்  18 ஆம் திகதி இவரது இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ஜே.ஆர்.கலந்து கொண்டு அஞ்சலியும் செலுத்தினார்.

1987 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் அவரை துப்பாக்கியால் தாக்கிய  குற்றத்தில்  சிறைத்தண்டனை அனுபவித்த விஜயமுனி என்ற கடற்படை சிப்பாய்க்கும், 1987 இல் மருதானை  குண்டு வெடிப்பால் பயங்கரவாத தடைசட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனோகரி டானியல் என்ற பெண்ணுக்கும் 1989 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பொது மன்னிப்பளித்தார்.இக்குண்டு வெடிப்பில் 40 பேர் பலி! புலிகள்-பிரேமதாச சமாதானப்பேச்சால் இவர் விடுவிக்கப்பட்டார்.

1999 இல் ஜனாதிபதி சந்திரிகாவின் பாதுகாப்பு பிரிவின் 10 போலீசார் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்ட மேடையில் பாடிய பிரபல சிங்கள பாடகர்களான ருகாந்த குணதிலக்க அவர் மனைவி சந்திரலேகாவை வீட்டில் புகுந்து கொலை மிரட்டித் தாக்கினர்.சந்திரலேகாவின் தலை மயிரை வெட்டினர்.நகைகளை திருடினர்.பாணந்துறை மேல் நீதிமன்றம் 4 வருட 6 மாத கால கடூழியச்சிறைத்தண்டனையும்,ஒவ்வொருவரும் 1 லட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறம்  தீர்ப்பளித்தது.2014 இல் இவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கினார்.

1992 இல் கிறிஸ்தவ விவகார அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி யூலியட் மொனிக்கா மீது இரட்டைக்கொலை குற்றம் சுமத்ததப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.சர்வதேச மகளிர் தினத்தில் இவருக்கும், 2006 இல் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் இரு வருடகால சிறைத்தண்டனை அனுபவித்த எஸ்.பி.திசநாயக்காவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொது மன்னிப்பளித்தார்.

2005 இல் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய றோயல் பார்க் சுவிடிஸ் யுவதியை(19 வயது) படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யூட் அன்ரனி என்ற சிங்கள இளைஞனுக்கு 2019 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கினார்.அத்துரலிய தேரர்,சிலதேரர்கள்  விடுத்த கோரிக்கையால் இந்த மன்னிப்பு அளிக்கப்பட்டது.முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக்கோரிய பிக்குமார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏன் ஜே.ஆர்.கொண்டுவந்தார்?

1958 இனக்கலவரம் பண்டாரநாயக்க ஆட்சியில் இடம்பெற்றவேளை ஜூன் 4 இல் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சில கட்சி பிரமுகர்களும் அவசரகாலசட்டத்தின் கீழ் கைதாகி எதுவித விசாரணைகளுமின்றி 3 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.தமிழர்களை தாக்கிய பிக்குமாரை பிரதமர் விடுவித்தார் என தார்சி வித்தாச்சி (Emergency'58 Tarzie Vittachi)  குறிப்பிட்டுள்ளார்.

1961 ஏப்ரல் பிரதமர் சிறிமாவின் ஆட்சியில் வடகிழக்கு கச்சேரிகளின் முன்பாக சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ( கல்முனை எம்.பி- எம்.சி அஹமது)அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி உட்பட தமிழரசு தொண்டர்களும் அவசரகால சட்டத்தின் கீழ் கைதாகி நீதிமன்ற விசாரணைகள் இன்றி 6 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.கல்முனை எம்.பி.சி அஹமது தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து சுதந்திரக்கட்சியில் இணைந்து விடுதலையானார்.சபை அமர்வுகளிலும் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

1976 மே 21 இல்  யாழ்.பஸ் நிலையத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அச்சிட்டு விநியோகித்ததாக அவசரகாலச்சட்டத்தின் கீழ் தமிழரசுக் கட்சி தலைவர்களான க.பொ.இரத்தினம்,வ.ந.நவரத்தினம்,அ.அமிர்தலிங்கம் கைதாகி தடுத்துவைக்கப்பட்டனர்.வட்டுக்கோட்டை தீர்மானத்தை சட்டவிரோ

தமானது என சிறிமாவோ அரசு  பிரகடனப்படுத்தி,அச்சிடுவது,விநியோகிப்பது சட்டவிரோதமானது,தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தது..இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு  ட்ரயல் அட் பார் ( Trial at Bar) நீதிமன்ற விசாரணை நடைபெற்றபோது எழுபதுக்கும் மேற்பட்ட பிரபல தமிழ் சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்.10 தினங்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானார்கள்.

 

1972 இல் சிறிமாவோ ஆட்சியில் அவசரகாலச்சட்டத்தில் கைதாகி நீதிமன்ற உத்தரவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களும்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் விடுதலையானார்கள்.தமிழ் இளைஞர்கள் வங்கிக்கொள்ளை,அரசியல் படுகொலைகள்,பொலிசார் படுகொலை போன்ற சம்பவங்களில் அவசரகால சட்டம்,குற்றவியல் சட்டங்களில்  கைதாகி நீதிமன்றம் சென்றால்,தமிழ் சட்டத்தரணிகளின் வாதத்திறமையால் விடுதலையாகின்றனர்.

1983 ஜூன் 4 பொதுசன பாதுகாப்பு அவசரகால விதிகளின் நீதிமன்ற விசாரணகள் எதுவுமே இன்றி தடுத்து வைக்கவும்,சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெறவும்,கைதான பின் இறந்தால் மரணவிசாரணையின்றியும்,பிரேதபரிசோனயின்றியும்  உடலை உறவினரிடம் ஒப்படைத்தல் போன்றவை அடங்கிய ஒரு விதிமுறைகளை வடக்கில் ஜனாதிபதி ஜே.ஆர்.வர்த்தமானி மூலம் அறிவித்தார்.இதுவும் பயங்கரவாத தடைச்சட்டமே என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்டித்தனர்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஒரு சட்டத்தரணி. சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா(கியூ.சி)பிரபல கிறிமினல் வழக்கறிஞர்,தமிழரான  சட்டமா அதிபர் சிவாபசுபதி,வேறு பிரபல சட்டத்தரணிகளுடனும் இது குறித்து ஆலோசித்து முதலில் இச்சட்டத்தை தற்காலிகமாக சில காலம் அமுல் செய்யவே முடிவு எடுத்தார்.ஆனால்,தமிழ் இயக்கங்களின் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துவரவே அதனை நிரந்தரமாக்கினார்.அது நிரந்தரமாகவே உள்ளது.

குருநகர் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர் மரணம்.

திருகோணமலையைச்சேர்ந்த கதிர்காமத்தம்பி நவரட்னராஜா (25 வயது)என்ற இளைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983 ஏப்ரல்  கைதாகி குருநகர் இராணுவ முகாமில் தடுத்துவைகப்பட்டிருந்தபோது ஏப்ரல் 10 மரணமானார். சடலம் யாழ்.மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு,யாழ்.நீதிவான் ஏ.நாகராஜா மரணவிசாரணை மேற்கோண்டார். சட்டவைத்திய அதிகாரி டொக்டர் சரவணபவானந்தன் பிரேத பரிசோதனையில்உடலில் 25 வெளிக்காயங்கள்,10 உட்காயங்கள் இருந்தன.ஒரு வாரத்துக்கு முன்பே

ஏற்படுத்தப்பட்டவை.பாரிய ஆயுதத்தால் தாக்கியதாக குறிப்பிட்டார்.

மரணவிசாரணை,பிரேதபரிசோதனையின்றி சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு.

1983 ஜூன் 15 நல்லூரில் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது,வீதியில் நின்ற படையினர் சுட்டதில் பலியான கனகசுந்தரம் யோகராஜா என்ற இளைஞனின்  சடலம் பிரேத பரிசோதனை,மரணவிசாரணையின்றி பொலிஸாரால் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சம்பவம்.