நாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, புனானை - ஜெயந்தியாய என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

பொலன்னறுவை மாவட்டத்தின் சேனபுர பகுதியிலிருந்து கர்ப்பிணித் தாயை வைத்திய பரிசோதனைக்காக ஓட்டமாவடியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்து விட்டு, மீண்டும் சேனபுர பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பொலனறுவை பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் இதன்போது மரணமடைந்த கர்ப்பிணி 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குருணாகல் பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 10 வயதான சிறுவனொருவனும் ஒரு வயதான குழந்தையொன்றும் அடங்குகின்றனர்.

அத்துடன் 28 வயதான முச்சக்கர வண்டியின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.