முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் பிரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர்சங்க வடமத்தியமாகாண இணைப்பாளர் ஜே.எம்.இலியாஸ், இலங்கை ஆசிரயர்சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கரமூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் 15.07.2021 கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு சென்றனர். 

இவ்வாறு செல்லும் போது வவுனியா - ஓமந்தை, புளியங்குளம் மற்றும், நெடுங்கேணி ஆகிய வீதித்தடைகளில் இராணுவத்தினர் தம்மை தடுத்து விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அதேவேளை முல்லைத்தீவு - தண்டுவான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ வீதித்தடையில் இராணுவத்தினர் தம்மை தடுத்து நீண்டநேரம் விசாரித்ததுடன், குறித்த வீதித்தடையில் இலங்கை ஆசிரியர்சங்க உபதலைவர் எச்.எம்.சமீம் பயணித்த வாகனம் உள்ளிட்ட, தாம்மோடு சென்ற இரு வாகனங்களையும் இராணுவத்தினர் தடுத்துவிட்டு ஏனையோரை மாத்திரமே செல்வதற்கு அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து முள்ளியவளையின் கழிக்காடு, மூன்றாங்கட்டைச் சந்தி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவவீதித்தடைகளிலும் தாம் தடுக்கப்பட்டு, தாம் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் கேப்பாப்புலவு பிரதானவாயில் வைத்தும் இராணுவத்தினர் தம்மைத்தடுத்து விசாரித்ததுடன் அதிலே தம்மோடு மற்றுமொரு வாகனத்தில் வருகைதந்தவர்களை இராணுவத்தினர் தடுத்ததுடன் தம்மை மாத்திரமே உள்ளே செல்ல அனுமதித்தாகவும் தெரிவித்தனர். 

எனவே தமது இந்த பயணத்தின் போது இவ்வாறான இராணுவ வீதித்தடைகள் தம்மை பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த ஆசிரியர் சங்கத்தலைவர் தலைமையிலான குழுவினரின் வருகையினை அறித்து, கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு முன்பாக பாரிய அளவில் விமானப்படையினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் என பலரும் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.