மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுமி காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மாவடிவேம்பு கிராமத்தை நோக்கி 11 மற்றும் 9 வயதுடைய சகோதரிகள் அவர்களது மாமாவுடன் வயல் பாதையூடாக சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது காட்டுப்பகுதியிலிருந்து வந்த யானை அவர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது. இச் சம்பவத்தில் இரு சகோதரிகளும் காயமடைந்த நிலையில், உடனடியாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து 11 வயது சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரது தங்கையான 9 வயது சிறுமி, சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.