(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் 337,445 பேருக்கு கொவிட் - 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இது இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின்கீழ் நாளொன்றில் அதிகூடிய தடுப்பூசிகள் வழங்கப்பட்ட தினமாகப் பதிவாகியுள்ளது.

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல்

நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், பொதுமக்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த்தடுப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 36 பேருக்கு இரண்டாம் கட்ட அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 289,122 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 32,385 பேருக்கும் வழங்கப்பட்டிருப்பதுடன் ஸ்புட்னிக் முதலாம் கட்டத் தடுப்பூசி 15,202 பேருக்கும் பைஸர் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தரவுகளின் அடிப்படையில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் அஸ்ட்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசி 925,242 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 385,885 பேருக்கும் சைனோபாம் முதலாம்கட்டத் தடுப்பூசி 3,417,525 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 1,136,881 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்புட்னிக் முதலாம்கட்டத் தடுப்பூசி 154,003 பேருக்கும் இரண்டாம்கட்டத் தடுப்பூசி 14,464 பேருக்கும் பைஸர் முதலாம்கட்டத் தடுப்பூசி 23,767 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாரத்திற்குள் 1.5 மில்லியன் மொடேனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளன. கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் இந்தத் தடுப்பூசிகள் எமது நாட்டிற்கு வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜப்பான் கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கத் தீர்மானித்திருக்கும் 1.45 மில்லியன் அஸ்ராசெனேகா தடுப்பூசிகள் எதிர்வரும் வாரமளவில் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்றாளர்களும் மரணங்களும்

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று புதன்கிழமை மாலை 7 மணி வரையான காலப்பகுதியில் 988 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 37 கொவிட் - 19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இவை நேற்று செவ்வாய்கிழமை பதிவானவையாகும். அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 274,622 ஆக உயர்வடைந்திருப்பதுடன், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 253,014 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 20,931 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.