(எம்.ஆர்.எம்.வசீம்)

ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்லும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அதனால் மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்தை துரத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்

இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இடம்பெற்றது என்ன ? |  Virakesari.lk

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்களின் உதவியுடன் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் தற்போது உரிமைக்காக போராடும் தொழிற்சங்க தலைவர்களை கைதுசெய்து அடைத்துவைக்க ஆரம்பித்திருக்கின்றது.

தொழிற்சங்க தலைவர்கள் எப்போதும் தான்சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டே போராட்டங்களை மேற்கொள்கின்றனர். 

அவ்வாறான தலைவர்களை கைதுசெய்ய எந்த அரசாங்கத்துக்கும் அதிகாரம் இல்லை. ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட தொழிற்சங்க தலைவர்களை அரசாங்கம் நீதிமன்ற உத்தரவையும் மறி, அதிகாரத்தை பயன்படுத்தியே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைத்திருக்கின்றது.

எமது காலத்திலும் தொழிற்சங்க போராட்டங்கள் இடம்பெற்றன. அப்போது நாங்கள் அந்த தலைவர்களை கைதுசெய்யவில்லை. சிறைகளில் அடைக்க முற்படவில்லை.

மேலும் நாட்டின் கல்வி கட்டமைப்பு நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.எமது காலத்தில் மாணவர்களுக்கு டெப் வசதிகளை இலவசமாக வழங்கும்போது அதனை விமர்சித்தார்கள்.

தற்போது தவணை அடிப்படையில் செலுத்தும் வகையில் மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

உயர்தர மாணவர்களுக்கு இந்த வசதிகளை செய்துகொடுத்த பின்னர் 6ஆம் தரத்தில் இருந்து மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

அந்த டெப்கள் அனைத்துக்கும் 3வருட உத்தரவுகாலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்திருந்தால் மாணவர்களின் இணையவழி கல்விக்கு இன்று பிரச்சினை ஏற்பட்டிருக்காது. கல்வித்துறையை முன்னுக்கு கொண்டுசெல்ல அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை

அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது.

பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்களுக்கு வாழமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டமும் இல்லை. அரச துறைகளின் சுயாதீனத்தன்மை இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. 

மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் அரசாங்கதுத்கு எதிராக செயற்படுபவர்களை அடக்கும் ஏகாதிபத்திய போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது 

எனவே அரசாங்கத்தின் ஏகாதிபத்திய போக்கை மக்கள் தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்தை துரத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றார்.