மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை லிளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  ஏ.சி.எம்.நிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை அவர்களது பொற்றோருக்கு தெரியாமல் சம்பவதினமன கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) சிறுமியின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள கோவிலுக்கு குறித்த இளைஞன் அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த  இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்து  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்  நீதிபதி  ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன் உட்பட இருவர் சத்துருக்கொண்டான் பகுதியில் வீதியால் சென்ற பெண்ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் 27 ம்திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.