இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் தீர்மானம்

By T Yuwaraj

13 Jul, 2021 | 07:23 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் கொவெக்ஸ் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.

ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட மேற்படி தடுப்பூசிகள் எதிர்வரும் வாரமளவில் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No description available.

அத்தோடு கொவிட் - 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கு அவசியமான தடுப்பூசிகளை இயலுமானவரை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தல் என்ற ஜப்பானின் கொள்கைக்கு அமைவாகவுமே இந்த அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதாக ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ஜப்பானின் 'லாஸ்ட் மைல் சப்போர்ட்' என்ற செயற்திட்டத்தின்கீழ், தடுப்பூசி வழங்கலில் சீரானதொரு செயற்திட்டத்தைப் பின்பற்றுவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறான கட்டமைப்பை நிறுவுவதற்கும் அவசியமான உதவிகளையும் ஜப்பான் வழங்கவுள்ளது. 

அதன்படி தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கு அவசியமான குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்குத் தடுப்பூசிகளை ஏற்றிச்செல்வதற்கான தாங்கிகளும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த உதவியின் மூலம் இலங்கையில் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் விரைவுபடுத்தப்படும் அதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராட்டத்தில் இலங்கைக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி உடன்நிற்கத் தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right