(நா.தனுஜா)
அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் குரலெழுப்பினார்கள். அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாகப் பதவிவிலகவேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினார்கள்.
அவர்கள் அனைவரும் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் தீர்மானங்களை மேற்கொள்வார்களா? என்பது குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இரட்டைப்பிரஜாவுரிமையைக் கொண்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கையெழுத்திட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியாகாது என்று கடந்த காலத்தில் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறெனின் தற்போது நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அமெரிக்கப்பிரஜையான பசில் ராஜபக்ஷ கையெழுத்திடும் நாணயத்தாள்கள் செல்லுபடியாகுமா? என்ற சந்தேகத்திற்கு அவர் உரிய பதிலை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் முடக்கமடைந்திருக்கும் வேளையில் எமது நாட்டில் மாத்திரம் அரசாங்கத்தினால் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.
தற்போது சர்வதேச நாடுகள் பலவும் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில் இன்னும் சில காலங்களில் முடக்கம் முழுமையாக நீக்கப்பட்டதன் பின்னர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்களால் எதிர்வுகூறப்படுகின்றது.
எனவே அச்சந்தர்ப்பத்தில் எரி;பொருள் விலையை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றதா? என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.
எனவே தற்போது எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் பேசாமல், நம்பிக்கையில்லாப்பிரேரணையை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தேவையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்ததன் காரணமாகவே அது நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் ஆளுந்தரப்பின் அமைச்சரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்தினடிப்படையில் நோக்குகையில் மேற்படி யோசனை அமைச்சர் உதய கம்மன்பிலவாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர், 'அரசாங்கத்தின் தீரமானங்களை அறிவிக்கும் கருவியே நான்' என்று கூறுகின்றார். எனவே எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைத்தவருக்கு எதிராக நம்பிககையில்லாப்பிரேரணையைக் கொண்டுவரவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு இருக்கின்றது. அதனை நாம் உரியவாறு செய்திருக்கின்றோம்.
அமைச்சர் உதய கம்மன்பிலவினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் பலர் கருத்துவெளியிட்டார்கள். அவர்களனைவரும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் தீர்மானங்களை மேற்கொள்வார்களா? என்பது குறித்து எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
பசில் ராஜபக்ஷ வந்ததன் பின்னர் எரிபொருள் விலை குறைவடையும் என்று கூறினார்கள். ஆனால் பசில் ராஜபக்ஷ மாத்திரமல்ல, அவர்களுடைய தரப்பிலிருந்து புதிதாக வேறு யார் வந்தாலும் எரிபொருள் விலை குறையாது. ஏனெனில் அவர்கள் பொதுமக்களின் துன்பங்கள் குறித்து சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. எனவே பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெற்றியடைகின்றாரா? அல்லது அமைச்சர் உதய கம்மன்பில வெற்றியடைகின்றாரா? என்பது குறித்துப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அதேபோன்று எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாகப் பதவிவிலகவேண்டும் என்று முதலாவதாக சாகர காரியவசம் கூறினார். அவர் கூறியதை நாங்கள் செய்துகாட்டியிருக்கின்றோம். எனவே முதுகெலும்பு இருப்பவர்கள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது உரியவாறு செயற்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
எரிபொருள் விலையதிகரிப்பின் காரணமாக பேக்கரி உற்பத்திப்பொருட்களின் விலைகள் மற்றும் பஸ் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துக் கட்டணங்களும் வெகுவாக அதிகரித்துள்ளன. அவ்வாறிருக்கையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்பொருள் விலையதிகரிப்பிற்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தாமல், எப்படித் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லப்போகின்றார்கள்?
அடுத்ததாக கடந்த அரசாங்கத்தில் சிலகாலம் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவிவகித்த அர்ஜுன மகேந்திரன் இரட்டைப்பிரஜாவுரிமையைக் கொண்டவர் என்பதால், அவர் கையெழுத்திட்ட நாணயத்தாள் செல்லுபடியாகாது என்று கடந்த காலத்தில் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.
அவ்வாறெனின், தற்போது அமெரிக்கப்பிரஜையான பசில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்றவகையில் கையெழுத்திடும் நாணயத்தாள்கள் செல்லுபடியாகுமா? என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தவேண்டும். பசில் ராஜபக்ஷவின் வருகைக்குப் பின்னர் எது நடைபெறாவிட்டாலும், நாட்டின் சொத்துக்கள், கட்டடங்கள் விற்பனை செய்யப்படுவது மாத்திரம் நிச்சயமாக இடம்பெறும்.
அதேபோன்று அண்மைக்காலத்தில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், பொருட்களின் விலைகளைக் குறைத்து அவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல், அவற்றை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலைகளிலேயே வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் வருடத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனவே சீனாவிலிருந்துவரும் தடுப்பூசியின் ஊடாக நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிவிட்டதைப்போன்ற மாயை ஏற்படுத்துவதற்கு அவசியமான முயற்சிகளிலேயே அரசாங்கம் தற்போது இறங்கியிருக்கின்றது. அரசாங்கம் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை வழங்காததன் காரணமாகவே, மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடுகின்றார்கள்.
அவ்வாறிருக்கையில் தற்போது மக்களின் போராட்டங்களையும் அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறு அடக்குமுறைகளைப் பிரயோகித்து மக்களின் போராட்டங்களையும் எதிர்ப்பலைகளையும் முடிவிற்குக் கொண்டுவந்துவிடலாம் என்று அரசாங்கம் கருதுமானால், அது முற்றிலும் தவறான கணிப்பாகும். இதேபோக்கிலேயே அரசாங்கம் பயணிக்குமானால், பொதுமக்கள் அனைவரும் ஒருமித்து வீதிகளில் இறங்கும் நிலையேற்படும். அப்போது அதனைத் தடுக்கமுடியாமல்போகும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM