(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைசெலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவே எடுத்தது. தீர்மானத்தை மாத்திரமே பகிரங்கப்படுத்தினேன். எரிபொருள் விலையினை குறைப்பதாக குறிப்பிட்டவர்கள், விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கின்றார்களே தவிர சிறந்த திட்டங்கள் எதனையும் இதுவரையில் முன்வைக்கவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலையினை அதிகரிக்கும் அதிகாரம் வலு சக்தி அமைச்சர் என்ற ரீதியில் எமக்கு கிடையாது. கடந்த மாதம் 13 ஆம் திகதி எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசம் வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியது.

 இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும்.

மேலும், அரச காலத்தில் தூது செல்பவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தற்போது உள்ளாகியுள்ளேன்.   அனைத்து தாக்குதல்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும்.

 கடந்த ஒரு மாத காலத்திற்குள் சர்வதேச சந்தையில்  எரிபொருள் தாங்கியின் விலை 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சுட்டி தற்போது அமுலில் இருந்திருந்தால், பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 179 ரூபாவாகவும்,  டீசல் ஒரு லீற்றரின் விலை 134  ரூபாவாகவும் அதிகரிப்பட்டிருக்கும். எரிபொருளின் விலை நிவாரண அடிப்படையில் காணப்படுகிறது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட வேளை மாற்று தீர்மானம் ஏதும் இல்லாத காரணத்தினாலேயே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது. எரிபொருளின் விலையை குறைப்பதற்கான சிறந்த யோசனையை எவராவது முன்வைத்தால் அதனை ஏற்றுக் கொண்டு எரிபொருளின் விலையை குறைக்க தயாராக உள்ளோம். எரிபொருள் விலையை குறைப்பதாக குறிப்பிட்டவர்கள் விமர்சனங்களை  மாத்திரம் முன்வைக்கிறார்களே தவிர எவ்வித மாற்று திட்டங்களையும் இதுவரையில் முன்வைக்கவில்லை என்றார்.