(எம்.ஆர்.எம்.வசீம்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அதிகூடிய நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். ஆரம்பகட்டமாக பெறப்பட்டிருக்கும் நஷ்டஈட்டு தொகையில் பெரும்பகுதி பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இதுதொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. 

கலந்துரையாடலைத்தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் கடல் சூழல் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, ஏற்பட்டிருக்கும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான ஆபத்துக்கள் இடம்பெறாமல் தடுக்க முடியுமான வழிமுறைகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை உபகுழு நீண்ட கல்நுதரையாடல்களை ஒவ்வொருவாரமும் மேற்கொண்டுவருகின்றது. 

எமது அழைப்பின் பேரில் இன்றைய கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் தீப்பற்றிய கப்பல் மற்று கொள்களன்கள் இன்னும் கடலில்தான் இருக்கின்றன. அவற்றை விரைவாக அகற்றவேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் இதனை எவ்வாறு அகற்றுவது தொடர்பில் கப்பல் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். 

இருதரப்பு இணக்கப்பாட்டுடனே இதனை மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வது சிரமாக இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் இன்னும் சில தினங்களில் அதுதொடர்பான நடவடிக்கை இடம்பெறும் என நம்புகின்றோம்.

அத்துடன் கப்பல் தீப்பற்றியதால் எமக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம், கடல் சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்வாதார பாதிப்பு தொடர்பாக கணிப்பிட்டு வருகின்றோம். தீப்பற்றிய கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடன் கலந்துரையாடியே நாங்கள் எமக்குரிய பாதிப்பு தொடர்பில் ஒப்புவித்து, அதற்குரிய நஷ்டஈட்டு தொகையை பெற்றுக்கொள்ளவேண்டி இருக்கின்றது. 

என்றாலும் நாங்கள் கலந்துரையாட இருக்கும் காப்புறுதி நிறுவனம் சாதாரண நிறுவனம் அல்ல. அவர்கள் சர்வதேச சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடனே எமது கோரிக்கைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அதனால் நாங்கள் அந்த காப்புறுதி நிறுவனத்துக்கு முகம்கொடுக்கும்போது சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியுடனே செல்லவேண்டி இருக்கின்றது. இதுதொடர்பாக சட்டமா அதிபர் மற்றும் சட்ட அறிஞர்களுடன் கலந்துரையடாடி வருகின்றோம்.

மேலும் கப்பல் உரிமையாளர்களிடமிருந்து முதற்கட்ட நஷ்டஈட்டு தொகை எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்து.அதில் பெரும்பகுதியை பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக பாதிக்கப்பட்டிருக்கும் மீனவ சமூகத்தின் தரவுகளை சேகரித்து வருகின்றோம் என்றார்.