ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற  உயர்மட்டக் கூட்டம்  இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும்  ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு  இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த  பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தேர்தல் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது  முன்னுரிமையாகும். தேர்தல்கள் விரைவாக நடக்க வேண்டும். இவ்வாறான ஜனநாயக செயற்பாடுகள் அபிவிருத்தியை வலுப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் இந்த அறிவிப்புகள் குறித்து ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் ஆரோக்கியமான நம்பிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்த இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைதியான தேர்தல்களுக்கான சூழலை ஏற்படுத்துவது முக்கியமான மைல்கற்களாகும். எவ்வாறாயினும் ஜம்மு - காஷ்மீரில் மறுவடிவமைப்பு மற்றும் சட்ட சபை எல்லைகளின் வடிவமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரதமர் மோடி ஆர்வம் செலுத்தியிருந்தார்.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் மையக் கட்சிகளின் அரசியல் தலைமைகள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தினர். மேலும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ ஆகியவற்றை மீண்டும் கொண்டுவருவதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

காஷ்மீரை மையமாகக் கொண்ட தலைமைத்துவத்தின் பெரும் சலுகையாகக் கருதப்படும் ஒரு நேர்மறையான நிலைப்பாட்டில், தேசிய மாநாடு பகிரங்கமாக ஜம்மு - காஷ்மீரில் தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்பதையும் இதன் போது ஒப்புக் கொண்டனர்.

மாநிலத்தை வழங்குதல், ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டமன்றத் தேர்தல்களை நடத்துதல், காஷ்மீர் பண்டிதர்களை மறுவாழ்வு செய்தல், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வீட்டுரிமைகள் உட்பட  ஐந்து கோரிக்கைகள் முன்வைத்தாக சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஜம்மு - காஷ்மீர் தலைவர்கள் தெரிவித்தனர்.

பிராந்திய முன்னேற்றத்தைக் காண விரும்பும் அனைத்து தலைவர்களிடமிருந்தும் ஒருமித்த நோக்கத்துடன் குழு அமைக்கப்பட்டிருப்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பிராந்திய மக்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு புதிய தொடக்கத்தைக் காணலாம் என்று நம்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னணியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீரின் அரசியல் எதிர்காலத்திற்கு இது நன்கு உதவும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைக்கும் செயல்முறை இறுதியாக தேர்தலை நடத்துவதன் மூலமும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் ஆட்சியை ஒப்படைப்பதன் மூலமும் முழுமையடையும்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் உண்மையிலேயே முன்னேற விரும்புகிறார்கள். கடந்த மூன்று தசாப்தங்களில் அவர்கள் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க விரும்புகிறார்கள். முன்னேற ஒரு உண்மையான விருப்பம் உள்ளது. ஜம்மு-காஷ்மீரை மறுசீரமைப்பதற்கான நிர்வாக மற்றும் அரசியல் செயல்முறையை முடித்து வைப்பதும் அங்கு வாழ் மக்களின் சுய மரியாதையையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துவதம் இந்தியாவின் மிக பாரிய பொறுப்பாகும்.