சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான 672 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மன்னார் பெரியகடை கரையோர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.

வன்னி இராணுவ தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய புலனாய்வு தகவல்களுக்கு அமைய 7 ஆவது விஜயபாகு காலாட்படையணி வீரர்களினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பெரியகடை கரையோரத்திற்கு மஞ்சள் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகள் மற்றும் அவற்றை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட டிமோ பட்டா லொறி என்பனவும் கைப்பற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள வாகனம், மூன்று படகுகள், படகுகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு இயந்திரங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.