(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்றங்களால் பிணையளிக்கப்பட்டவர்களை, பலாத்காரமாக  தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைப்பது  சட்ட விரோதமானது எனவும், அவ்வாறாண நடவடிக்கை பிணையளித்த நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோருக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியே குறித்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய ஆகியோரின்  கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்தலும் தனிமைப்படுத்தலும் தொடர்பாக எனும் தலைப்பின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,  கொரோனா தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களை மீறியதாக கூறி  ஆர்ப்பாட்டங்கள் செய்வோர் கைது செய்யப்படுவதும், அவர்களை தடுத்து வைப்பது தொடர்பிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகக் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளானது பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடாக கடந்த 2021 ஜூன் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட PMD/PR/845/21 அறிக்கையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிசாருக்கு அறிவித்ததாக கூறப்படும் திகதி வெளிப்படுத்தப்படாத DDG(PHS)1/DO2/7/13/2017/20 எனும் இலக்கத்தை உடைய அறிவித்தலுக்கு அமைய பொலிஸார் குறித்த  அறிக்கையை வெளியிட்டதாக தெரிவித்திருந்தனர் எனக் கூறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  கடந்த நாட்களில் அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோரை பொலிசார் கைது செய்தமையை வன்மையாக கண்டித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் அண்மைய நாட்களில் வெளியிட்ட சுகாதார வழி காட்டல்கள் பிரகாரம்  ஸ்பா நிலையங்கள்,  பல் பொருள் அங்காடிகள்,  உணவகங்கள், மதுபான நிலையங்களுக்கு திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் சில திறந்த வெளி செயற்பாடுகளுக்கும்  அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில்,  அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமையினை எந்த நியாயமுன்றி, சட்டத்துக்கு அப்பால் சென்று தடை செய்ய முயல்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மூன்று பக்கங்களைக் கொண்ட குறித்த கடிதத்தில்  சுகாதார வழிகாட்டல்களில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்படவில்லை எனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'சுகாதார வழி காட்டல்கள் பிரகாரம்,  தனிமைப்படுத்தலானது  கொரோனா தொற்றாளர்கள் மற்றும்  தொற்றுக்கு உள்ளாகியவர்கள்  எனும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் தொடர்பிலேயே செல்லுபடியாகும். அவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் என கைது செய்யப்படுவோர், நீதிமன்றங்களால் பிணையளிக்கப்பட்ட பின்னரும், பலாத்காரமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது சட்ட விரோதமானதாகும். அது நீதிமன்றை அவமதிக்கும் செயற்பாடாகும்.

எனவே அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்வதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு உமக்கு கீழ் செயற்படும் பொலிஸ்  அதிகாரிகளை வலியுறுத்துங்கள்'  என சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை  தண்டனை வழங்கும் செயற்பாட்டுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.