நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின்  03 ஆம் பகுதி இன்று (10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று (10) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் மாதம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரக்கலகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருக்குபானே கிராம உத்தியோகத்தர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெற்கு பெலேன கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யடதொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பேதென்ன தோட்டத்தின் புதான பிரிவு மற்றும் யடதொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பேதென்ன தோட்டத்தின் க்ளே பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.