(ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்)

தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பில் ஜக்கிய நாடுகள் தொடர்ந்தும் பொறுப்புடன் செயற்படும் என வடக்கு மக்களிடத்தில் உறுதியளித்த ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் வரவேற்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு  தாம் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.செலயாளர் நாயம் பான் கீ மூன்  மீள்குடியேற்ற பிரதேசமான பளை வீமன்காமம் பகுதிக்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களது பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு அம்மக்களுடனும் கலந்துரையாடினார். 

இதன்போது அப்பிரதேச மக்கள் தமது தேவைகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தனர்.  குறிப்பாக ஒருபகுதி காணிகளே விடவிக்கப்பட்டுள்ளன. ஆகவே விடுவிக்கப்படாத ஏனைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக மலியிட்டி போன்ற செழிப்பான விவசாயம் மீன்பிடி போன்ற தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய மக்களின் இடங்கள் அவசியம் விடுவிக்கப்படவேண்டும். மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் மக்களது அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.  குறிப்பாக மக்கள் மீளக்குடியமர்ந்த மக்களின் தொழில் வாய்ப்புக்கள் வீட்டுவசதிகள் எற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனக்கோரினார்கள்.

பொதுமக்களின் கோரிக்கைகளை அவதானமாக கேட்டறிந்து கொண்ட ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூன்,

வடக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் காத்திரமான அழுத்ததை ஜக்கிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும். அத்துடன் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பிலும் பொறுப்புனர்சியுடன் செயற்படுவோம். அவர்களும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொழில்வாய்ப்புக்கள் போன்றவற்றை உருவாக்கி தருவதிலும் ஜ.நா நடவடிக்கை எடுக்கும். 

மேலும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக ஜக்கிய நாடுகளானது பொறுப்புணர்ச்சியுடன் செயற்படும். குறிப்பாக காணாமல் ஆக்கபட்டோர் விவகாரம் அரசியல் கைதிகளின் விவகாரம் மீளக்குடியேற்றமும் காணிகள் மீள் கையளிப்பும் போன்ற விவகாரங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. இந்நிலையில் இவற்றை நிறைவேற்றுவதில் தாம்  இது தொடர்பிலான அழுத்தங்களை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு வழங்குகின்றோம்.  காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்தை நான் வரவேற்கின்றேன். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான அழுத்தங்களை பிரதமருக்கு கொடுத்துள்ளோம் என்றார்.