(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக கொள்கைகளுக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டு  மக்கள் அனைவரும்  ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும். அரசாங்கம் இறுதி அத்தியாயத்தை நெருங்கியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்பு கூற வேண்டும். இவ்விடயத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ  மாத்திரம் விதிவிலக்கல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்களின் பேச்சு சுதந்திரம் பலவந்தமான முறையில் அடக்கப்படுகிறது. இதற்கு  கொவிட் தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது  கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று  சிவில் அமைப்பினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இப்போராட்டத்தை   பொலிஸார் பலவந்தமான முறையில் அடக்கினார்கள். ஆனால் நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ பதவியேற்றதை வீதியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தரப்பினர்களை பொலிஸார் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது  ஆச்சரியத்திற்குரியது.

ஜனநாயக கொள்கைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. பேச்சு சுதந்திரம்  சர்வாதிகரமான முறையில் முடக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் இறுதியில் மக்களால் புறக்கணிக்கப்பட்டதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இறுதி அத்தியாயத்தை நெருங்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி இனி தலைமையேற்று முன்னெடுக்கும் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை பகிரங்கப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிரான செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு   வெளிநாட்டு நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும். ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள சூழ்ச்சிகளை ஒருபோதும் வெற்றிப் பெற செய்ய இடமளிக்க மாட்டோம்.  அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.