(ஆர்.ராம், எம்.நியூட்டன், ரி.விரூஷன்)

ஐ.நா செயலாளர் பான்கிமூன்  தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதவியை விட்டுச் செல்கின்றார் என குறிப்பிட்டுள்ள வடக்குமாகாண  சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா இழைத்த துரோகத்தையும் வஞ்சனையையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்று ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் விஜயம் செய்திருந்தார். இதன் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஐ.நா செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் யாழ்.பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போதே பான்கிமூன் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் பதவியை ஏற்றிருந்தார். இக்காலகட்டத்தில் இலங்கைப்பிரச்சினை தொடர்பாக அதீதம் ஈடுபட்டிருந்தார்.  ஆனால் தற்போது நிலைமைகள் மாறுபட்டிருக்கின்றன. யுத்தம் நிறைவடைந்தாலும் தமிழர் தாயகங்களில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பான்கிமூனின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகின்றது. அவர் தமிழ் மக்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடனேயே பதிவி விலகுகின்றார். ஐக்கிய நாடுகள் சபையை நாம் வெகுவாக நம்புகின்றோம். ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறை தற்போது வரை ஈடு செய்யவில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் ஐ.நா இழைத்த துரோகத்தையும் வஞ்சனையையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். 

தற்போது பான்கிமூன் தனது பதவியிலிருந்து விலகிச் செல்வதற்கு முன்னதாக ஒரு இறுதிச் சுற்றுப்பயணமாகவே இலங்கைக்கு வருகை தந்திருத்திக்கின்றார். அவ்வாறான நிலையிலும் இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளை தொலைத்ததோடு பல்வேறு பிரச்சினைகளுடன் இருக்கின்றார்கள் என்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாகவே இப்பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கின்றோம். அவர் பதவியிலிருந்து விலகிச் சென்றாலும் ஈழத்தமிழர் விடயத்தில் தவறிழைத்து விட்டோம் என்பதை என்றும் மறக்கக்கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த போது அவருக்கு அரசாங்கம் புலிச்சாயம் பூசியது. அவ்வாறிருக்கையில் தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவரும் பான்கிமூனை அரசாங்கத் தரப்பு ஆதரவாளர் என நாம் கருதுவதில் என்ன தவறுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.