அட்டன் கல்வி வலயத்தால் திடீரென மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆசிரிய இடமாற்றங்களும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் உத்தரவுக்கமைய இரத்து செய்யப்பட்டுள்ளதாக மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேற்படி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் அட்டன் கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரிய இடமாற்ற உத்தரவுகளின்படி 19.05.2021 திகதியிடப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் 22 மே 2021 அளவிலேயே அட்டன் வலய கல்விப்பணிப்பாளரால் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டடுள்ளன.

இவ் திடீர் இடமாற்ற உத்தரவால் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சீர்குலையுமென எமது ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் பாடசாலைகள் மூடியிருக்கும் நிலையில் இந்த இடமாற்ற திட்டமானது முன்னெடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை இவை குறித்த உத்தரவுகள் இடமாற்ற சபைக்கு அறிவிக்கப்படாமல் அத்தியாவசிய தேவை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன.

திரைமறைவிலான தீர்மானத்தால் அதிர்ச்சிக்குள்ளான பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுக்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மலையக ஆசிரியர்  ஒன்றியம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக மேற்படி இடமாற்றங்கள் தற்போது  மாகாண கல்வி பணிப்பாளரால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பணிப்பாளரின் உத்தரவின்படி இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஹட்டன் கல்வி வலயத்தால் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மலையக ஆசிரியர் ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.