(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சாதாரண பல்கலைக்கழக முறைமைக்குள் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை கொண்டுவருவதாலும், சாதாரண மாணவர்களை இதற்குள் ஈர்த்துக்கொள்வதாலும் பொது கல்வியை இராணுவ மயப்படுத்தும் பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதென பிரதான எதிர்க்கட்சி சபையில் குற்றம் சுமத்தியது. 

துறைமுக சட்டமூலத்தை அவசரப்பட்டு அனுமதித்து நாட்டைக் காட்டிக்கொடுக்க  வேண்டாம் - எரான் | Virakesari.lk

நெருக்கடி நிலைகளை கையாள முடியாது அரசாங்கம் பிரச்சினைகளை சமாளிக்க சர்வாதிகார போக்கினை கையாள முயற்சிக்கின்றது எனவும் கூறினர்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினர், 

இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவிக்கையில், 

இராணுவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதால் நாட்டின் ஏனைய பிரச்சினைகள் தீரப்போவதில்லை. நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளும் வீதம் அதிகரிக்க வேண்டியுள்ள போதிலும், அதனை முன்னெடுக்க  முடியாதுள்ளது.

அதேபோல் உயர் கல்வியில் மாணவர்களின் சிந்தனையை மட்டுப்படுத்த கூடாது. ஆனால் இராணுவ பல்கலைக்கழகத்தில் அது மட்டுப்படுத்தப்படுகின்றது.

அதுமட்டுமல்ல பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாறாக இராணுவ பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகின்றது.

இதனால் பாதுகாப்பு துறையில் உள்ளாகாத மாணவர்கள் இணைத்துக்கொள்ளும் போது நெருக்கடி நிலையொன்று உருவாகும்.பாதுகாப்பு விடயங்களை மாத்திரம் இந்த பல்கலைக்கழகம் கையாளும் என்றால் அவ்வாறு இயங்கலாம், ஆனால் ஏனைய துறைகளில் இது தலையிடுகின்ற காரணத்தினால் கண்டிப்பாக இந்த பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவர வேண்டும். 

இராணுவ பல்கலைக்கழகம் உருவாவதை நாம் எதிர்க்கவில்லை, ஆனால் இப்போது கொண்டுவந்திருக்கும் சட்டமூலம் பொது கல்வியை இராணுவ மயப்படுதுவதாக அமைகின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டும், எனவே தான் இந்த சட்டமூலத்தை நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹகீம் கூறுகையில், நாட்டின் உயர்கல்விக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளது என்பது இன்று கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலமானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

உயர்கல்வி அமைச்சருக்கும் இப்போது எதனையும் செய்ய முடியாது, மேலிடத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டளையை இவர்கள் நிறைவேற்றியாக வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் பல அமைச்சர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளன. கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகம் குறித்து எமக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை, இதன் தரம் அதிகரிக்க மேலும் காலம் தேவைப்படும், ஆனால் சகல பல்கலைக்கழகங்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று இருக்கின்ற நிலையில் அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வெறுமனே கட்டிடங்களை கட்டுவதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வங்கி போன்று செயற்படும் நிலையொன்று உருவாகியுள்ளது. நெருக்கடி நிலைகளை கையாள முடியாது அரசாங்கம் பிரச்சினைகளை சமாளிக்க சர்வாதிகார போக்கினை கையாள முயற்சிக்கின்றது என்றார்.