(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அமைச்சரான பின்னர் இன்று காலையில் பாராளுமன்ற உறுப்பினராகவும் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.  சபைக்குள் ஆளும் கட்சியினரால்  அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த கெட்டகொட கடந்த செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்ததை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பெயரை கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

நிதி அமைச்சராக பஷில்
பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சு பஷில் ராஜபக்ஷவிற்கு வழங்கப்படுவது குறித்தே ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இன்றைய தினம் நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இன்று முற்பகல்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதுவரை காலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் நிதி அமைச்சு இயங்கியது.

பிரதமருக்கு பொருளாதார கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சு
இந்நிலையில் அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பஷில் பாராளுமன்ற உறுப்பினரானார்
அமைச்சு பதவியேற்ற பின்னர் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய வேளையில் காலையில், பஷில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் 9வது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார். அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார். ஜனாதிபதிக்கு வலது பக்க ஆசனம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காலையில் சபைக்குள் வந்த அமைச்சர் பஷில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும், அமைச்சர் சமல் ராஜபக்ஷவையும் பார்த்து வணக்கம் தெரிவித்து நேராக சபாநாகர் ஆசனத்தை நோக்கி சென்ற அவர், சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் வணக்கம் தெரிவித்து தனது ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

ஆளும் கட்சி பஷில் ஆதரவு அணி வரவேற்பு
பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மேசைகளில் தட்டி வரவேற்றனர். அதன் பின்னர் தனது ஆசனத்தில் பஷில் ராஜபக் ஷ அமர்ந்த பின்னர் ஒவ்வொரு உறுப்பினர்களும் தேடிவந்து அவரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தனது பக்கத்துக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.

கம்மன்பில மறைமுக தாக்குதல் - விமல், வாசு, தயாசிறி சபையில் இல்லை
இந்நிலையில் வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் எதிர்க்கட்சி  உறுப்பினர் சமிந்த விஜயசிறி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் எரிபொருள் விலை குறைப்பு மற்றும் அமெரிக்க இரட்டை பிரஜாவுரிமை நபர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடீர்களா என கேள்வியொன்றை முன்வைத்தார். இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, நான் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் மட்டுமே பொறுப்புக் கூறுவேன், எனக்கு வேறு எவரும் தலைவர் அல்ல என்றார். அதேபோல் நேற்றைய தினம் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் சபைக்கு வருகைதரவில்லை, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வேளையில் சபைக்கு வராத இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, பின்னர் சபைக்கு வந்து தனது ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

நிதி அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள்
இந்நிலையில் நிதி அமைச்சின் கீழ் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நிறுவனங்களானது, பொதுத் திறைசேரி, அரச நிதிக்கொள்கைகள் திணைக்களம், தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச நிதித் திணைக்களம், திறைசேரி நடவடிக்கை திணைக்களம், அரச நிதி கணக்குகள் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம், தகவல் தொழிநுட்ப முகாமைத்துவ திணைக்களம், நீதி அலுவல்கள் திணைக்களம், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களம், அபிவிருத்தி நிதி திணைக்களம் என்பன உள்ளடங்குகின்றது.

பஷில் ராஜபக் ஷவின் பின்னணி
ஹம்பாந்தோட்டை மாவட்ட கிருவாபத்துவ கிராமத்தில் 1951 ஆம் ஆண்டில் பிறந்த பஷில் ரோஹன ராஜபக்ஷ, இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2007 செப்டம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றினார்.அதனை அடுத்து 2010 ஆம் ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 425,861 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 07 வது பாராளுமன்றத்திலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றினார். பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் அவர் 2005 முதல் 2010 வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். பஷில் ராஜபக்ஷ கொழும்பு இசிபதன கல்லூரியினதும் கொழும்பு ஆனந்த கல்லூரியினதும் பழைய மாணவராவார்.