(நா.தனுஜா)

இலங்கையின் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளின்படி தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தகவல்கள் எவையும் பதிவாகவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் மீளாய்வு செய்வது சிறந்ததாகும் என்று தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கும் வகையிலான அறிவித்தலொன்றை கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இருப்பினும் அமெரிக்கா இராஜாங்கத்திணைக்களத்தினால் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட 'இலங்கைக்கு விஜயம்செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 4 ஆம் மட்ட எச்சரிக்கையானது, கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிவித்தலில் 'இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்' என்பதைக் குறிக்கும் 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருந்தது. அதேவேளை ஏற்கனவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருந்த தீவிரவாதத்தாக்குதல் அச்சுறுத்தல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, மேற்படி புதிய அறிவித்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துத் தெளிவுபடுத்தும் விதமாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து  அமெரிக்காவினால் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4 ஆம் மட்ட பயண எச்சரிக்கையானது, கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலில் 3 ஆம் மட்ட பயண எச்சரிக்கையாகத் தளர்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்படும் பயண அறிவித்தல்கள் குறிப்பிட்ட  கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டு மீள வெளியிடப்படும்.

இந்நிலையில் இது குறித்து நேற்று புதன்கிழமை அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், இலங்கையில் காணப்படும் கொவிட் - 19 பரவல் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு 4 ஆம் மட்ட பயண எச்சரிக்கையானது 3 ஆம் மட்ட பயண எச்சரிக்கையாகத் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் மாற்றமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் புலனாய்வுப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளுக்கு அமைய தீவிரவாத செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய  அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.