சூர்யா - பா.ஜ.கா. மோதல் 

Published By: Digital Desk 2

08 Jul, 2021 | 04:34 PM
image

குமார் சுகுணா 

நடிகர் சூர்யாவுக்கு எதிராக, தமிழ்நாடு பா.ஜ.க. இளைஞரணி பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்களின்  கருத்துக்கள் எப்போதும் மக்களை  மிக விரைவாக சென்றடையும்.  சமூக அரசியல் கருத்துக்களாக இருப்பின்  அரசியல் ரீதியான மோதல்களையும் நடிகர்கள் சந்திக்க நேரிடும். பல நேரங்களில்  சில ஊடகங்கள் அவர்களின் கருத்துக்களை  திரிபுபடுத்தி கூறிவிடும். 

இதனால் அரசியல் சர்ச்சைகளிலும் நடிகர்கள் சிக்குவதுண்டு. அது அவர்களது தொழில்துறையை பாதிக்கக்கூடிய  வாய்ப்புகளும் உள்ளன. இதனால் பொதுவாகவே பல முன்னணி நடிகர்கள் கருத்து கூற பயப்படுவர். ஆனால் ஒரு சிலர்  சமூகம் சார்ந்த தங்களது கருத்துக்களை மிக தைரியமாக பதிவிடுவர். அவர்கள் எதிர்புகளை பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அவ்வாறான ஒருவர்தான் நடிகர் சூர்யா.

சமீப காலங்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிடும் அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

புதியக் கல்விக் கொள்கை, நீட் தொடங்கி சமீபத்திய ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா வரை பல்வேறு விடயங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. அவர் வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கும் அதேநேரத்தில், சூர்யாவுக்கான ஆதரவுக் குரல்களும் எழுப்பப்பட்டுவருகின்றன.

2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையையும், அதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்த சூர்யா, அது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் பா.ஜ.க.-வினர் பலரும், `சூர்யாவுக்கு ஏன் இந்த வேலை' என்பது போன்ற எதிர்க்கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

 சூர்யாவின் `காப்பான்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி,'' புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்றார்கள் சிலர். ஆனால், சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நானும் சூர்யாவின் கருத்துகளை ஆமோதிக்கிறேன்'' என்றார்.

சூர்யாவின் கருத்தை ரஜினி ஆதரிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சூர்யா முன்வைத்த கருத்துக்கள் இந்திய அளவில் கவனம்பெற்றன.

நீட் தேர்வு காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ``நீட் போன்ற மனுநீதித் தேர்வுகள், எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமன்றி உயிர்களையும் பறிக்கின்றன'' என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா.

அகரம்' அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றிவரும் நடிகர் சூர்யா, அதே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை வெகு நாட்களாக வலுவாக எதிர்த்துவருகிறார்.

சமீபத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு. இதையடுத்து நீட் தொடர்பாக மீண்டுமோர் அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில், ``ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூகநீதிக்கு எதிரானது. தங்கள் எதிர்காலத்துக்காக 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும் நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி'' என்று குறிப்பிட்டதோடு, ஏ.கே.ராஜன் குழுவுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனைவரும் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் சூர்யா. மேற்கண்ட அறிக்கை வெளியான பின்பு பேசிய பா.ஜ.க-.வின் அண்ணாமலை, ``நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை வரம்பைத் தாண்டும் வகையிலிருந்தது. நீட் தேர்வு முடிவுகள் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்'' என்றார்.

கல்வி சார்ந்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களுக்குத் தவறாமல் கருத்து தெரிவித்து வந்த சூர்யா, கல்வியைத் தாண்டி சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு எதிராக பா.ஜ.க.வினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ்.பி.செல்வம், ``மாணவர்களைக் குழப்பும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக, உண்மைக்கு மாறான தகவலைப் பரப்பிவருகிறார் நடிகர் சூர்யா. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காகத் தொடர்ந்து எதிர்க்கிறார். நடிகர் சூர்யா இதை இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லையென்றால், பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம்'' என்றார்.

 இது குறித்து பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும், ``கடந்த சில ஆண்டுகளாக வெளியான சூர்யாவின் எந்தப் படமும் ஓடவில்லை. அதனால் விளம்பரம் தேடிக்கொள்ள நினைத்து இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். படத்தை ஓடிடி-யில் ரீலிஸ் செய்ததால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் ஆதரவையும் இழந்துவிட்டார் சூர்யா. இதனால் திரையுலகில் நம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற அச்சத்தில், மத்திய அரசுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார்'' என்கின்றனர்.

சூர்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் அவரது ரசிகர்கள், ``அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும் சூர்யா, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கல்வி சார்ந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது எந்த வகையிலும் தவறாகாது. தான் சார்ந்திருக்கும் திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது, சூர்யா சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரியானது. இந்தக் கருத்துகளுக்கு பா.ஜ.க.-வினர் விளக்கம் தரலாமே தவிர, அவரை வசைபாடுவது சரியாகாது'' என்கின்றனர்.

    திரைக் கலைஞர் சூர்யாவை மிரட்டும் நோக்கத்துடன் பா.ஜ.க-.வினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கே.பாலகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை சூர்யா எதிர்க்க காரணம் என்னவென்று பார்ப்போம்., பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு 'யு, யு/ஏ அல்லது ஏ' சான்றிதழை தணிக்கை குழு வழங்கும். தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும். தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்யவும், தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இதன் மூலம் அதிகாரம் கிடைக்கும்.

இந்த சட்டத்திருத்த மசோதாவை அமுல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை இந்திய அரசு வெளியிட்டது.

தணிக்கை குழு வழங்கும் சான்றிதழ்களோடு சேர்த்து வயது வாரியாகவும் சான்றிதழ்கள் அதாவது 'யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இருக்கிறது இந்த புதிய சட்டம். மேலும், இதில் படத்தின் கருவோ அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோ மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். இதுபோன்ற பல திருத்தங்களை இந்த சட்டம் முன் மொழிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதில் தங்களது கருத்துகளும், பரிந்துரைகளும் அடங்கிய 12 பக்கங்கள் கொண்ட கடிதத்தை படைப்பாளிகள் சமூகவலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், அதில் படைப்பாளிகள், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருப்பதோடு அரசின் முன் அடிபணிய வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரைத்துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசின் தலையீடு அதிகரித்திருக்கிறது. ஒரு இனம் சார்ந்தோ குறிப்பிட்ட மதம் சார்ந்தோ, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளையும், பிரசாரங்களையும் தாங்கியபடி படங்கள் வந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அதற்கு தடை விதிப்பது, வெளிவராமல் செய்வது என்பது சமீப காலத்தில் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.

கலைத்துறையில் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் இத்தகைய தலையீடுகள் நடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இப்போது அடுத்த கட்டமாக சென்சார், நீதிமன்றம் தாண்டியும் கலைப்படைப்பில் இந்திய அரசின் நேரடித் தலையீடு நிச்சயம் ஆபத்தானது என்பதே திரைத்துறையில் இதற்கு எதிர்ப்பு கிளம்ப காரணம்.

தணிக்கை குழுவில் படத்துக்கு சான்று பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தணிக்கை குழுவை தாண்டி, திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை முன்பு படைப்பாளிகள் அணுகலாம். ஆனால், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தீர்ப்பாய சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் இது கலைக்கப்பட்டதால் தணிக்கை குழுவில் பிரச்சினைகளை சந்திக்கும் போது படக்குழு நேரடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இப்போது நேரடியாகவே மத்திய அரசு தலையிடும் வகையில் சட்டவரைவு கொண்டுவரப்படுவது திரைத்துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்துக்கு திரைத்துறையில் கடுமையான அதிருப்தி கிளம்பியுள்ளது. சூர்யா உட்பட நடிகர்கள் கமல்ஹாசன், நந்திதாதாஸ், இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதாகவும், அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கான இணைப்பையும் ட்வீட் செய்துள்ளார்.  எது எப்படியோ சூர்யாவுக்கும் பா.ஜ.வுக்கும் இடையே மோதல் தொடர்ந்துக்கொண்டே போகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25