சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி கொழும்பு மற்றும் அட்டனில் ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி கொழும்பு, பத்தரமுல்லை – பொல்துவ சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 31 பேர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கலந்துக்கொண்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டளர் ரத்கரவ்வே ஜீனரதன தேரர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னிலை சோஷலிச கட்சி என்பன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தன. குறித்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு பொலிசார் கூறியதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

ஒன்றுக்கூடல் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சட்டத்திற்கு முரணானது என பொலிசார் தெரிவித்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்த முற்பட்ட போது பதற்ற நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பலரை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.