நல்லிணக்கம் என்பது நாட்டைப் பிரிக்கின்ற ஒரு சூழ்ச்சித்திட்டமல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை குறைத்து மதிப்பிடாது அதிலுள்ள முக்கயத்துவத்தைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பது எல்லோருடையவும் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

நல்லிணக்கம் என்பது நாட்டைப் பிரிக்கும் ஒரு சர்வதேச சூழ்ச்சியாகும் என ஒரு செய்திப் பத்திரிகையில் இன்று பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் உறுதிசெய்யப்பட்டு எல்லோரும் அச்சம், சந்தேகம் இல்லாமல் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்பும் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு சில அடிப்படைவாதிகள் தெரிவித்துவரும் இத்தகைய பிழையான வியாக்கியானங்கள் தொடர்பாக தாம் பெரிதும் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பிழையான வியாக்கியானங்கள் மூலம் நாட்டில் எதிர்கால தலைமுறையினரிடம் பிழையான புரிதல்கள் ஏற்பட முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொண்டார்.

அடுத்துவரும் மூன்றுமாத காலப்பகுதியில் வடக்கில் அகதி முகாம்களில் வாழும் மக்களுக்குத் தேவையான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அளவை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக அந்த நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தபோதும் சகல காணிகளையும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக முகாம்களில் உள்ள மக்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கிலும் தெற்கிலுமுள்ள அடிப்படைவாதிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிழையான விளக்கங்களை முன்வைத்து வருகின்றபோதும் 30 வருடகால மிகமோசமான யுத்தத்தின் அனுபவங்களுடன் வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள வடுக்களை ஆற்றி முன்னேறிச் செல்லும் பயணம் 24 மணிநேரத்தில் செய்துவிடக்கூடியதொன்றல்ல எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சுயாதீனமான நீதித்துறை, ஊடக சுதந்திரம், ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்டுதல் ஆகிய எல்லா விடயங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டிய ஒரு ஆரம்ப பயணத்தயே தாம் இதுவரையில் முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில்மெதுவாகவும் அதேநேரம் ஒரு வெற்றிகரமானதுமான பயணத்தை மேற்கொள்வதற்கு தமக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் எல்லோரிடமும் கேட்டுக்கொண்டார்.

ஐ நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இந்த விஜயம் உதவியாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ நா செயலாளர் நாயகம் தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமது தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முழுமையான உதவிகளை வழங்குவதாக ஐ நா செயலாளர் நாயகம் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டிலும் தாம் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் அன்று தாம் கண்ட இலங்கையைப் பார்க்கிலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன உறுதி செய்யப்பட்டு அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் இல்லாத எல்லா இனங்களுக்கிடையேயும் சமாதானமும் ஐக்கியமும் உறுதி செய்யப்பட்டுள்ள இலங்கையைத் தாம் இவ்விஜயத்தின்போது காணக்கூடியதாக இருந்ததாகவும் திரு. பான் கீ மூன் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழா செப்டெம்பர் 04 ஆம் திகதி குருணாகலையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதுடன், நாட்டின் பொது நோக்கங்களை வெற்றிபெறச் செய்வதற்காக நடைபெறும் இந்த கீர்த்திமிகு மாநாட்டில் நாட்டை விரும்பும் எல்லா மக்களும் ஒன்றிணைவர் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.