(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டு மக்களுக்கு சாப்பிடும் வாய்ப்பு இன்னும் மூன்று மாதங்களுக்காவது இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் இராதாகிருஷ்ணன் எம்.பி. சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் பேசுகையில்,

ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது ஏற்றுமதி, இறக்குமதி என்ற இரண்டிலும் தங்கியுள்ளது. அந்த வகையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாக இருக்கின்ற தேயிலை, இறப்பர் அதேபோன்று தைத்த ஆடைகள் ,மாணிக்கக்கல் போன்ற ஏற்றுமதி  பொருட்களினால் இலங்கையின் வருமானம் அதிகரிக்கின்றது.

அதேபோன்று இறக்குமதி என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான உரம்,மருந்து ,அதேபோன்று மக்களுக்கு தேவையா ன அரிசி, பருப்பு, உடு துணி மற்றும் பல்வகைப்பொருட்கள், இலத்திரனியல் பொருட்கள் என பல பொருட்களுக்கு இறக்குமதியையே நாம் நம்பியிருக்கின்றோம்.

ஆனால் இன்று இந்த இறக்குமதி எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, டொலர் இல்லாமை போன்ற காரணங்களினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுடன் மட்டும் இல்லாது நாட்டு மக்களுக்கு சாப்பிடும் வாய்ப்பு இன்னும் மூன்று மாதங்களுக்காவது இருக்குமா என்ற சந்தேகமும் எங்களுக்கிருக்கின்றது. இவ்வாறான சூழலில் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு முடியாத அரசு மக்களின் போராட்டங்களைக்கூட தடை செய்துள்ளது. மக்களின் போராட்டங்கள் முன்கொண்டு வருகின்ற  ஊடகங்கள் மீதும் அடக்கு முறை பிரயோகிக்கப்படுகின்றது என்றார்.