(நா.தனுஜா)

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தரளவான வணிகங்கள், அவற்றின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கின்றது.

எதிர்வுகூறும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை | Virakesari.lk

அதன்படி சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு நிதியம் 75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கையின் தேசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றது. 

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சிறிய, நடுத்தரளவான வணிகங்கள் குறிப்பாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சியாண்மை செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கும் நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறிய, நடுத்தரளவான வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பெண்கள் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை இலகுபடுத்துவதன் மூலம் அவர்களின் பொருளாதார இயலுமையை அவர்களே நன்குணர்ந்துகொள்வதற்கு வாய்ப்பேற்படும் அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது பங்களிப்புச்செய்யும் என்று இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு நிதியம் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிதியமொன்றாகும். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான நிதியுதவிகளை வழங்குவதைப் பிரதான செயற்பாடாகக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.