திருமணம் என்பது........!

Published By: Digital Desk 2

06 Jul, 2021 | 04:48 PM
image

திருமணம் என்பது வெறும் இரு தனிப்பட்ட நபர்களுடைய உறவு மட்டுமல்ல. இந்த இரு நபர்களுக்கூடாக இரு வேறுபட்ட குடும்பங்கள், சமூகங்கள், அவற்றின் கலாசாரங்கள், மத நம்பிக்கைகளால் பின்னப்படுகின்றதொரு சட்டரீதியான ஒப்பந்தம். 

முன்னைய காலங்களில் தமது அரசுரிமையை நிலை நாட்டவும், வணிக மற்றும் இராஜதந்திர உறவுகளை , தமது அரசியலை கட்டியெழுப்பவும் கூட இத்திருமண ஒப்பந்தங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு. 

எவ்வாறாயினும் எக்காரணங்களால் பின்னப்பட்டதாயினும் திருமணம் என்பது ஓர் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தினை உருவாக்குவதற்கான வழிமுறை என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. 

இக்கட்டுரையும் தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காணப்படுகின்ற கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பகுதியில் அதிலும் குறிப்பாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய  பூநொச்சிமுனை பகுதிகளில் வாழ்கின்ற கலப்புக் குடும்பங்கள் குறித்த விடயத்தினையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சமூக மற்றும் மதம் சார் சவால்களை மேற்கோள் காட்டும் வகையில் அமைகின்றது.

தனிப்பட்ட நபர்களது உள்ளங்களை பாதிக்காத வகையில் பெயரிடப்படாமல் தொடரப்படுகின்றது. இக்கட்டுரைக்காக தனிப்பட்ட நபர்களை சந்தித்த போது அவர்கள் பகிர்ந்துகொண்ட தமது கதைகளிலிருந்து சில….

“நான் மிகவும் வறியதொரு குடும்பத்தினை சேர்ந்தவள், எனக்கு 03 ஆண் சகோதரங்கள், அவர்கள் அனைவரும் திருமணம் முடித்து தத்தம் குடும்பங்களுடன் சுயதொழில் செய்து வாழ்கின்றனர். தந்தையில்லாத நிலையில் நோயாளியாக படுக்கையில் அசைவற்ற நிலையில் வாழ்கின்ற அம்மாவினை கவனிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

சாதாரண தரத்துடன் பாடசாலைக் கல்வியை நிறுத்தியிருந்த நான் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தபடி எனது தாயாரையும் கவனித்து வந்தேன்.

இத்தொழிலுக்கு செல்லும் போது முஸ்லீம் இன நண்பியொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் அவரது குடும்பத்துடனும் வளர்ந்தது. ஓய்வுநேரங்களிலும் முக்கிய நாட்களிலும் அவரது வீட்டிற்கு சென்று வருவதுண்டு. நாளடைவில் அவரது இஸ்லாம் சமயம் பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இந்நண்பியின் வழிகாட்டலுடன் நானும் இஸ்லாம் மதத்தினை தழுவிக்கொண்டேன்.

எனது தாயாரும் எதிர்ப்பு காட்டவில்லை. மதத்தினை தழுவிய பின் எங்கள் நட்பு மேலும் நெருக்கமடைந்தது. எனது நண்பியின் பெற்றோரின் குடும்பத்தினரும் என்னுடன் நெருக்கமாயினர். இதனால் நண்பியின் உறவுக்காரர்களின் வீட்டிற்கும் அடிக்கடி போய் வருவதுண்டு. எனது நண்பியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த வேளை அவரது குடும்பத்தினர்களும் உறவினர்களும் என்னுடைய திருமணம் பற்றியும் விசாரிக்க தொடங்கினார்கள்.

அதிலொரு உறவினர் தமக்கு தெரிந்த நபர்ரொருவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும், இந்து சமயக்குடும்ப பின்னணியைக் கொண்ட அந்நபர் இஸ்லாம் சமயத்தினை தழுவியுள்ளதாகவும் தனக்கு ஒரு இஸ்லாம் பெண்ணைத்தான் திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகவும் தன்னிடம் தெரிவித்தாக என்னிடம் கூறி எனது சம்மதத்தினை கேட்டார். நானும் எனது சம்மத்தினை தெரிவித்தேன். எனது தாயும் தனக்கு சம்மதம் என தெரிவித்தார்.

அந்நபரினது குடும்பத்தினருக்கும் என்னைப் பிடித்திருந்தது. கடந்த வருடம் அவர் இலங்கைக்கு வந்து இஸ்லாம் திருமணச்சட்டத்தின்படியும் , முறையிலும் என்னைத்திருணம் செய்துகொண்டார். கோவிட்-19 இனால் உடனடியாக எம்மால் மீண்டும் வெளிநாடு செல்ல முடியவில்லை. அதனால் தற்போது எனது வீட்டில் வசித்து வருகின்றோம். எனது தாயார் தன்னுடைய சமயத்தினைத்தான் இன்றும் பின்பற்றுகின்றார், நாங்கள் நாம் தழுவிய இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றுகின்றோம்.” 

 

“நான் சிறுவயதில் எனக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் வீட்டைவிட்டு வெளியேறிய ஒருவன். புல இடங்களிலும் கூலிவேலை செய்து வந்தேன். நான் வேலை செய்து வந்த சாப்பாட்டுக்கடையின் மேலுள்ள சிறு அறையில் தான் நானும் ஏனையவர்களுடன் தங்கியிருந்தேன்.

என்னுடன் கூலிவேலை செய்து வந்த ஒருவர் என்னிடம் மிகவும் அன்பாயிருப்பார். தந்தை போல் அன்பைக்காட்டுவார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். அவர் விடுமுறையில் சென்று வரும் போதெல்லாம் எனக்கும் உணவுப்பண்டங்கள் கொண்டுவருவார். கிறிஸ்தவத்தினை சேர்ந்த அவர் நத்தார் மற்றும் ஈஸ்டர் தினங்களில் விடுமுறையில் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்வார்.

அவரு வீட்டிற்கு சென்று வரும் போது அவரது மகளுக்கும் எனக்குமிடையில் காதல் ஏற்பட்டது. இரு வருடங்கள் மறைமுகமாக தொடர்ந்த எமது காதலை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. காரணம் நான் விரும்பிய பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருந்தார்கள். ஆகவே நாம் எமது காதலைச்சொன்னோம். எமது மதத்திற்கு மாறினால் திருமணம் செய்து தருவதில் ஆட்சேபனையில்லை என தெரிவித்தனர்.

சில மாதங்கள் இன் முரண்பாட்டின் காரணமாக  கதைக்காமல் இருந்தோம். ஆனாலும் இறுதியில் நான் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவினேன்.

கிறிஸ்தவ முறைப்படி தான் எமது திருமணம் ஆரவாரங்கள் இல்லாமல் இடம்பெற்றது. திருமணத்தின் பின்னர் கூலித்தொழிலை விட்டுவிட்டு அவர்கள் சீதனமாக தந்த வீட்டில் அவர்களது ஊரில் வாழதொடங்கினேன். சிறிதாக மரக்கறி தோட்டம் ஆரம்பித்த நான் இன்று பல ஏக்கர் நிலத்தில் மரக்கறி பயிரிடுகின்றேன்.

எமக்கு இரு குழந்தைகள். மூத்த பிள்ளைக்கு தற்போது 14 வயதாகின்றது. பிள்ளைகளும் கிறிஸ்தவ சமயத்தினைத்தான் பின்பற்றுகின்றார்கள். சமயம் தொடர்பில் எனக்கும் மனைவிக்கும் இடையிலோ குடும்பத்தினருக்கிடையிலோ எவ்வித முரணும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் ஆரம்பத்தில் மனைவியின் உறவினர்கள் என்னைப்பற்றி கருத்துக்கள் விமர்சனங்களை கூறியதாக அறிந்ததுண்டு. ஆயினும் நேருக்கு நின்று யாரும் எதுவும் இதுவரை சொல்லியதில்லை.”

இவ்வாறான கலப்பு திருமணங்கள் இடம்பெற்ற 05 குடும்பங்கள் தமது கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டனர். பொதுவான பிரச்சினைகளை பகிர்ந்துகொண்ட இவர்கள் குடும்ப, சமூக மற்றும் பொருளாதார காரணிகளே இக்கலப்பு திருமண நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவித்தனர். அதிலும் பெரும்பாலும் இஸ்லாம் ஆண்களே தமிழ்ப்பெண்களைத் திருமணம் செய்வதாகவும் தமிழ் ஆண்களோ, முஸ்லீம் பெண்களோ ஒப்பீட்டளவில் குறைவாகவே திருமணம் செய்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இவ்வாறான கலப்புத் திருமணங்களை பெரும்பாலும் தமிழ்ச்சமூகத்தினர் ஏற்பதில்லை எனவும் இதனால் முஸ்லீம் இளைஞர்களை திருமணம் செய்கின்ற தமிழ்ப்பெண்களுள் அதிகமானோர் இஸ்லாம் மதத்தினை தழுவி இக்கலாசார முறையிலேயே பெரும்பாலும் திருமணம் செய்துகொள்கின்றனர். இதனால் பல முரண்களும் தோற்றுவிக்கப்படுகின்றன.

  

மதம் மாறிய தரப்பினரின் குடும்பத்தவர்களால் ஏற்படுகின்ற ஒதுக்கல்கள் கலப்புத்திருமணங்களினால் மதம் மாறிய போதும் புதிதாக இணைந்த சமூகத்தினரால் ஏற்படுகின்ற புறக்கணிப்புக்கள், சமூக புறக்கணிப்புகளால் தம்பதியர்களிடம் ஏற்படுகின்ற முரண்பாடுகள், இவ்வாறான கலப்பு திருமணங்களில் பிறக்கின்ற குழந்தைகள் மீதான ஒதுக்கல்கள் இவ்வாறான பிரச்சினைகளை இக்கலப்பு குடும்பங்கள் எதிர்கொள்கின்ற வேளை இக்கலப்பு திருமணங்கள் குறித்த ஆய்வொன்றும் 2020 இல் பிரசுரிக்கப்பட்டது. அதிலிருந்து மேற்கோள்காட்டப்பட வேண்டியதொரு பகுதி வருமாறு,

“வலியின் முக்கியத்துவம்"

இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணம் செல்லுபடியாவதற்கு வலி ( திருமணப் பாதுகாவலர்) அவசியமாகிறது. இருப்பினும் திருமணப் பாதுகாவலர், உறவினர்கள், காழி, போன்றவர்கள் இருக்கும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளது. வலி ( திருமணப் பாதுகாவலர் ) இல்லாதும் திருமணம் இடம்பெற்றுள்ளது. வலியாக உறவினர்கள் இடபெற்றுள்ளவற்றில் பெண்கள் ( 6) தந்தை  மற்றும் சகோதரர் வலியாக இருந்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இடம்பெற்ற திருமணத்தில் குறிப்பிட்ட சிலரே பெற்றோர்களின் விருப்பத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஆண்களில் குறிப்பிட்ட துணையின்  சிலருக்கு ( 2 பேர் ) உறவினர்கள் வலியாக செயற்பட்டுள்ளனர். காரணம் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு முன் இஸ்லாத்தினை ஏற்றுகொண்டவர்களாக இருப்பதனால் மகளுக்கு வலியாக இருந்துள்ளதாக அவதானிக்க முடிகின்றது. பெண்களை விட ஆண்கள் திருமணம் செய்த துணைகளுக்கு அதிகமாக (19 பேர்) காழி திருமணத்தின் வலியாக இருந்துள்ளார்.

 காரணம், ஆண்கள் திருமணம் செய்து கொண்ட அனைத்து துணையின் வலியாக ( தந்தை, உறவினர்கள் ) முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கின்றமையினால் வலியாக செயற்பட முடியாத சூழ்நிலை காரணமாக காழி வலியாக இருந்துள்ளனர்.

இதே போன்று பெண்களுக்கு வலியாக காழி இருந்துள்ளமையும் அவதானிக்க முடிகின்றது. காரணம் பெண்கள் கலப்பு திருமணம்  செய்வதற்கு பிரதேசம் விட்டு பிரதேசம் சென்று திருமணம் செய்கின்ற சந்தர்ப்பத்திலும், பெற்றோர்கள் வலியாக இருப்பதற்கு மறுக்கின்ற போதும் வலியாக காழி செயற்படுகின்றார். 

பொதுவாக இஸ்லாமிய திருமண முறைப்படி திருமணம் செய்யாது மதம் மாறி திருமணம் செய்யும் அனைத்து திருமணங்களுக்கும் வலி இன்றிய திருமணமாக அவதானிக்க முடிகின்றது. அவற்றில் பெண்களை விட ஆண்கள் அதிகமானவர்களாக (10 பேர்) காணப்படுகின்றனர்.

முடிவுரை கலப்பு திருமணம் சமூகத்திலும், குடும்பத்திலும் விமர்சனங்களுக்குட்பட்டாலும், முஸ்லிம் குடும்பங்களில் நெடுநாட்களாக இடம் பெறுகின்றது.

இஸ்லாமிய கணவன் மனைவி தேர்வில் சில பொடுபோக்கு தன்மையை அவதானிக்க முடிகின்றதோடு, திருமணத்தின் வலியின்  முக்கியத்துவத்தை அறியாத நிலையையும் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்களை திருமணம்  செய்யும் அதே கண்ணோட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்வதில் பெண்களின்  மனநிலை காணப்படுகிறது. பெண்களின விருப்பில் திருமணம் இடம்பெறுவது ஷரியா முக்கியத்துவம் வழங்கியிருந்தாலும் கலப்பு திருமணத்திற்கான முழுமையான சட்டத்தை பெண்கள் அறியாது உள்ளனர்.

இளந்தலைமுறையினருக்கு இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய தெளிவின்மையினால் இளைஞர்களுக்கு இது பற்றிய விளிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பாரதூரத்தை உணர்த்த வேண்டும். இஸ்லாத்தை ஏற்க முன் இஸ்லாத்தைப்பற்றிய தெளிவு, அதன்  அடிப்படைக் கோட்பாடுகள், தனது கடமைகள், அறிந்து கொள்வது பொருத்தமானதேயாகும். அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும். 

ஆணோ, பெண்னோ இஸ்லாத்தில் இணைகின்றபோது, அவர்கள் முழுமையாகவே தமது சமூகம், குடும்பம், உறவுகளைத் துறந்து வருகின்றனர். எனவே இவர்கள் வரும் குடும்பங்களில்  இவர்களை அரவணைக்க வேண்டும். இத்தகைய கலப்புத்திருமணங்கள் பெரும்பாலும் இரகசியத் திருமணங்களாகவே நடைபெறுகின்றன.

இதற்கு காழிகளும், உலமாக்களதும், திருமணப் பதிவாளர்களின்  ஒத்துழைப்பு காரணமாக அமைகிறது. இதனால், இத்தகைய வாலிபர்களும், யுவதிகளும் தாம் பெரும் தவறுகளைச் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்படும் காழிகள், உலமாக்கள் இஸ்லாமிய சட்டத்தை பிரயோகிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய திருமணம் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்குமுறைகளை அனைத்து முஸ்லிம் சமூகம் அறிந்திருக்க வேண்டும்  அப்போதுதான்  இஸ்லாத்திற்கு முரணான திருமண சம்பிரதாயங்கள் இஸ்லாமிய ஷரீஆ திருமணத்துடன் கலக்காமல் பாதுகாக்க முடியும்.”

  

நாச்சியாதீவில் இடம்பெற்ற இவ்வாறானதொரு ஆய்வு போன்றே இத்தகைள தமிழ்- முஸ்லீம் எல்லைக்கிராமங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாய்வுகளும் அதில் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகளும் முரண்பாடுகளை விரிவுபடுத்தாமல் இன ஒற்றுமைக்கான அல்லது புரிதலுக்கான களத்தினை அமைத்துக்கொடுக்குமெனில் அதுவே காலத்தின் தேவையாகும். 

கேஷாயினி எட்மண்ட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04