30 வருட கால நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு Ma’s  ட்ரொபிக்கல் ஃபூட்ஸ் புரொசஸிங் நிறுவனம் கிளிநொச்சி இயக்கச்சியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் சுய-நீடிப்பு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையை நிர்மாணித்துள்ளது.

வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையானது VEGA/BIZ+ முதலீட்டு திட்டத்தின் ஆதரவுடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் நிலையத்துடன் (USAID) இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதில் Ma’s இன் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த திட்டத்தின் மூலமாக சமூகத்திலுள்ள மக்களுக்கு அனுகூலங்கள் வழங்கப்படவுள்ளதுடன், உள்நாட்டு பொருளாதாரத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் பொருளாதார வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது.

விவசாய சமூகங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் சமாதானத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ளதுடன், இப்போது தேசிய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியமை எமது முறையாக அமைந்துள்ளது” என NLFF இன் தலைவரும், MA’s ட்ரொபிகல் ஃபூட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான மரியோ டி சில்வா தெரிவித்தார்.

இந்த நிறுவனம், யுத்தத்தினால் விதவையான பெண்கள், முன்னாள் சிறுவர் போராளிகள் போன்ற சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளதுடன், வலிமையான மற்றும் நிலையான கைகோர்ப்புகளை கட்டியெழுப்பி வருகிறது.

‘நிலையான சுழற்சி பொருளாதார வர்த்தக மாதிரி’ உடனான இலங்கையின் முதலாவது உணவு பதப்படுத்தல் நிறுவனமான MA’s இன் துணை நிறுவனமான North Lanka Family Foods (NLFF) நிறுவனத்தின் மூலமாக நிர்வகிக்கப்படவுள்ளது.

எந்தவித விரயங்களுமின்றி பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமாகும். விநியோக சங்கிலி மட்டுமன்றிரூபவ் ஒவ்வொரு கூறுகளும் குறைந்தபட்ச சூழல் தடத்தை விட்டுச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உணவு பதப்படுத்தல் நிலையத்திற்கு மேலதிகமாக, சேதன விவசாய பண்ணை மாதிரி, குடியிருப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் மாநாட்டு வசதிகள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நிதிப் பங்காளர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சமூக சேகரிப்பு நிலையங்களுடன் இணைந்து உள்நாட்டு விவசாயிகள் நேரடியாக நிதிசார் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம்.

“விவசாய சமூகங்களுக்கு அருகாமையிலேயே எமது தொழற்சாலைகளை நிர்மாணிப்பதை நாம் கொள்கையாக வைத்திருப்பதுடன் இதுவே உயர் தரமான உற்பத்திக்கும், கிராமிய சூழலில் இளைஞர்கள் மற்றும் ஏனையோருக்கு தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க வழிவகுத்துள்ளது” என டி அல்விஸ் மேலும் தெரிவித்தார்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தியாளராக MA’s ட்ரொபிகல் ஃபூட் புரொசஸிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் திகழ்கிறது. இலங்கையில் தரமான உணவு மூலப்பொருட்கள் மற்றும் சில்லறை பாவனையாளர்களுக்கான சுவையூட்டிகள் போன்றவற்றிற்கான உற்பத்தியாளரும், சந்தைப்படுத்துநருமாக MA’s உள்ளது.

இந்த நிறுவனமானது தம்புள்ள மற்றும் மினுவங்கொட நகரில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளதுடன் கொழும்பை தளமாக கொண்டு செயற்படுகிறது. நிதி, தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ உதவிகள் இல்லாது பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிராந்தியங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தொழில் வாய்ப்புகள் மற்றும் குடும்ப வருவாயை அதிகரிக்கும் பொருளாதார அபிவிருத்தி திட்டமே BIZ+ ஆகும். இத்திட்டத்திற்கு USAID இனால் நிதியளிக்கப்படுகிறது.

2011 முதல் BIZ+ திட்டத்தின் மூலமாக விருந்தோம்பல், விவசாயம் மற்றும் தும்பு, ஆடை, தன்னியக்க சேவைகள், கைவினைகள் மற்றும் உணவு பதப்படுத்தல் துறைகளிலுள்ள வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை ரூபாவில் 1,420 மில்லியன் ($9,8 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.