பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இன்று (06) எழுத்துமூலம் அறிவித்தார். 

அதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஜயந்த கெட்டகொட 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். 

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 

அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.